நஜிப்புக்கு ‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை 3’ சொற்போர் நடத்த மகாதிர் சவால்

 

பிரதமர் நஜிப்புக்கு தம்முடன் பொது விவாதம் நடத்த வருமாறு மகாதிர் முகமட் மீண்டும் சவால் விட்டுள்ளார்.

மலேசியாகினி வெளியிட்டிருந்த ஒரு கட்டுரையில் பிரதமர் நஜிப் முன்னாள் பிரதமர் மகாதிர் மீது நடத்திய மறைமுகத் தாக்குதல்கள் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன. அத்தாக்குதல்கள் ஒவ்வொன்றுக்கும் மகாதிர் அவரது வலைத்தளப் பதிவில் இன்று மாலை பதில் அளித்தார்.

அந்தக் கட்டுரையில் மகாதிரின் பெயரைக் குறிப்பிடாமல், ஒரு குறிப்பிட்டத் தலைவர் அவர் சொல்வதைக் கேட்க விரும்பும் எந்த ஓர் ஊடகத்தையும் பயன்படுத்தி அதன் மூலம் அவர் தமது சுயநல அரசியல் இலாபத்திற்காக போலியான செய்தியைப் பரப்புவதோடு அவரது நாட்டைப்பற்றி பொய்களும் சொல்கிறார் என்று நஜிப் கூறியுள்ளார்.

இதற்கு, மகாதிர் தமது அறிக்கைகள் பொய்யானவை   என்று நஜிப் நிரூபிக்க வேண்டும் என்று கோரியதோடு அரசாங்கம் எப்படி உள்ளூர் ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டார்.

மலேசியாவில் அச்சகம் மற்றும் மின்னஞ்சல் ஊடகங்களை அரசாங்கம் அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. 1எம்டிபி மற்றும் நஜிப்பின் வங்கிக் கணக்கில் இருக்கும் ரிம2.6 பில்லியன் ஆகியவற்றை பற்றி நாடாளுமன்றம்கூட விவாதிக்க முடியாது. இவை பற்றி அம்னோ மாநாடு மௌனமாக இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

வெளிநாட்டினர் கேட்கும் போது நான் என்னையே தணிக்கை செய்துகொள்ள வேண்டுமா? என் வாழ்நாள் முழுவதும் நான் வெளிநாட்டினருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் சொன்னது போலியானது என்று நிரூபியுங்கள். ‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை 3’-ஐ வைப்போம்”, என்று மகாதிர் கூறினார்.

ஜூன் 2015 இல் “மறைப்பதற்கு ஒன்றுமில்லை 1” இல் பங்கேற்க நஜிப் கிளம்பினார் என்றும் ஆனால் போலீஸ் அவரை தடுத்து விட்டது என்றும் கூறப்பட்டது.

ஆகஸ்ட் 2017 இல் “மறைப்பதற்கு ஒன்றுமில்லை 2” ஷா அலாமில் நடத்துவதற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொள்ள நஜிப்புக்கு மகாதிர் அழைப்பு விடுத்திருந்தார். அது நடத்தப்படவிருந்த ஷா அலாம் மண்டபத்தில் அமளி ஏற்பட்டது.

அந்நிகழ்ச்சி பிற்பகல் மணி 3.00 க்கு தொடங்கியது. மணி 5.30 அளவில், மகாதிர் பேசிக் கொண்டிருக்கையில் அது பெரும் குழப்பத்தில் மூழ்கியது.