கேட்டலோனிய தேர்தல்: பிரிவினைவாத கட்சிகள் ஒன்று சேர முன்னாள் அதிபர் அழைப்பு

சுதந்திரத்துக்கான அழுத்தத்தை தொடர்ந்து அளிக்கும் வகையில் பிரிவினைவாத கட்சிகள் ஒன்றிணைந்து நடைபெறவுள்ள பிராந்திய நாடளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள கேட்டலோனியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் பூஜ்டிமோன் அழைப்பு விடுத்துள்ளார்.

கேட்டலன் நாடாளுமன்றம் சுதந்திரத்தை அறிவித்தவுடன், ஸ்பெயினின் மத்திய அரசாங்கம் அங்கு நேரடி ஆட்சியை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து அங்கு டிசம்பரில் தேர்தலை நடத்த ஸ்பெயின் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

“இது கேட்டலோனியாவிற்காகவும், அரசியல் கைதிகளின் சுதந்திரத்துக்காவும் மற்றும் குடியரசுக்காகவும் ஜனநாயகவாதிகள் அனைவரும் ஒன்றிணைவதற்கான நேரம்” என்று சனிக்கிழமையன்று தனது ட்விட்டர் பதிவில் பூஜ்டிமோன் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது பெல்ஜியத்தில் உள்ள பூஜ்டிமோனை கைது செய்வதற்கு ஸ்பெயின் நீதிமன்றம் ஒன்று ஐரோப்பிய ஒன்றிய அளவிலான கைதானையை வெளியிட்ட அடுத்த நாள் இவ்வாறு தனது கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

நியாயமான விசாரணைக்கு உத்தரவாதம் அளிக்கும் வரை தான் ஸ்பெயினுக்கு திரும்பி வரமுடியாது என்று பூஜ்டிமோன் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தால் தேடப்பட்ட வரும் நிலையிலும், தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார்.

பெல்ஜியத்தில் உள்ள பூஜ்டிமோனின் நான்கு கூட்டாளிகளும் சாத்தியமான நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் எட்டு முன்னாள் அதிகாரிகள் ஸ்பெயினில் காவலில் இருக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் கேட்டலோனிய சுதந்திரத்துக்காக கிளர்ச்சி, தூண்டுதல் மற்றும் பொது நிதியை தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

கேட்டலோனியாவின் பல்வேறு பகுதிகளில் பெரியளவிலான கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அக்டோபர் 1 அன்று கேட்டலோனிய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சட்டவிரோதமான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பின்னர், கேட்டலோனிய நாடாளுமன்றம் ஒரு வாரம் முன்பு ஒரு சுதந்திர குடியரசை உருவாக்குவதற்கான பிரகடனப்படுத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.

வேறு எந்த நாடும் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்பெயினின் மத்திய அரசாங்கம் தனது அரசியலமைப்பிலுள்ள அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி நிலைமையை விரைவாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தது. -BBC_Tamil