15 மணி நேர தொடர் அடைமழை, பலத்த காற்று – பினாங்கு மாநிலம் நிலைகுத்தியது

நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்து, சுமார் 15 மணி நேரம் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால், பினாங்கு மாநிலம் நிலைகுத்தியது.

வெள்ளம் காரணமாக, நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், 5 மாவட்டங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும், கனத்த மழையோடு, மதியம் 2 மணிக்குத் தொடங்கிய பலத்த காற்று அதிகாலை 5 மணி வரை வீசியதால், நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்ததோடு, சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியான, கடுமையான மழை காரணமாக, பினாங்கில் உள்ள அனைத்து தாழ்வான பகுதிகளும், 0.2 மீ முதல் 1 மீ உயரத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

4 மாவட்டங்களில் உள்ள பல்வேறு நிவாரண மையங்களில்,  வெள்ளத்தில் பாதிகப்பட்டவர்கள்  1,968  பேர் தங்கியுள்ளதாக முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

மத்திய செப்ராங் பிறை மாவட்ட வெள்ள நிவாரண மையத்தில் 1,125 பேர், வட செப்ராங் பிறை மாவட்டத்தில் 615 பேரும், வடகிழக்கு மாவட்டத்தில் 70 பேரும், தென்மேற்கு பகுதியில் 158 பேரும் தங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

“மலேசிய ஆயுதப்படை தங்கள் உறுப்பினர்களை வடகிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது. செப்ராங் பிறை பகுதியில், நாம் இன்னும் சுங்கை பெட்டாணி முகாம் இராணுவப் படையினருக்காகக் காத்திருக்கிறோம், எங்களுக்கு அவர்களின் உதவி மிகவும் தேவை. பாதிக்கப்பட்ட பலரை நாம் காப்பாற்ற வேண்டும்,” என்றார் அவர்.

“தற்போது மழை குறைந்துவிட்டதால், நிலைமை சற்று நன்றாக உள்ளது. இருந்தும், வெள்ள நீர் இன்னும் வடியவில்லை, மீண்டும் பலத்த காற்று வீசவும் மழை பெய்யவும் சாத்தியம் இருப்பதால், விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படலாம் என நாங்கள் கவலைப்படுகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைக் கையாள எங்களிடம் போதுமான வசதிகள் இல்லை. மலேசியப் பொது பாதுகாப்புப் படை, காவல்துறை, தீ மற்றும் மீட்புத் துறை மற்றும் உதவிக்கு வந்த அனைத்து மீட்பு குழுக்களுக்கும் குவான் எங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அதேசமயம், அதிகாலை 3.30 மணியளவில் தொடர்புகொண்டபோது, தனது அழைப்புக்குப்  பதிலளித்த துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடிக்கும் குவான் எங் நன்றி தெரிவித்தார். தனது வேண்டுகோளுக்கு இணங்கி,  வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற இராணுவ உதவியை உடனடியாக அனுப்பி வைத்ததற்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.