குவான் எங் : பினாங்கில் அவசரக்கால அறிவிப்பு இல்லை

15 மணி நேரத்திற்கும் மேலான, பலத்த காற்றையும், கடுமையான மழையையும் தொடர்ந்து, பினாங்கில் ஏற்பட்ட வெள்ளம்,  வரலாற்றிலேயே மிக மோசமானதாக கருதப்படுகிறது.

சமீபத்தில் பினாங்கு மாநில சட்ட மன்றத்தில், கடந்த 2013-ம் ஆண்டு முதல் அக்டோபர் 15 வரை 119 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் இவ்வாண்டு மட்டும் 21 முறை திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.

இம்முறை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டதோடு, பல முக்கியச் சாலைகளும் மூடப்பட்டன. நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்தன, ஆங்காங்கே நிலச்சரிகளும் ஏற்பட்டு, பினாங்கு மாநிலமே நிலைகுத்தியுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கி 4 முதியவர்கள் இறந்தனர், ஒரு வங்காளதேசி மரம் விழுந்து கொல்லப்பட்டார். காணாமல் போன அவரின் நண்பர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மாலை 6 மணி வரை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 3,365 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக வட செபராங் பிறை விளங்குகிறது.

‘அவசரக்காலம்’ அறிவிக்க விரும்பவில்லை

இதற்கிடையில், முதலமைச்சர் லிம் குவான் எங், மாநில அரசு இப்போது ‘அவசரக் காலம்’ அறிவிக்க விரும்பவில்லை என்றும், தற்போதைய நிலை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மலேசிய வானிலை ஆய்வகம், நேற்று மாலை ஆரஞ்சு நிலை எச்சரிக்கையை வெளியிட்டது. பெர்லிஸ், பேராக், கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களுக்கு நள்ளிரவுக்கு முன்னதாக, கடுமையான மழை காரணமாக சிவப்பு நிலைக்கு மேம்படுத்தியது.

இருப்பினும், இன்று காற்றழுத்தம் குறைந்து, கடும் மழைக்கான எச்சரிக்கை நிலை, ஆரஞ்சு நிலைக்கு மாறியுள்ளது என பெர்னாமா செய்திகள் கூறுகின்றன.