கேமரன் மலை நிலைகொள்ளும் கேவியஸ், நெகிரியில் களம் காண்கிறார் சி. சிவராசா

‘ஞாயிறு’ நக்கீரன், வரும் பொதுத்தேர்தலில் கேமரன் மலையில் ஜசெக மனோகரனை எதிர்த்து களம் காணப்போவது ஏறக்குறைய கேவியஸ் என்று உறுதியாகிவிட்ட நிலையில், அங்கு மஇகா சார்பில் களம் காணக் காத்திருந்த சி.சிவராசா நெகிரி செம்பிலானில் போட்டியிடுவதற்கு ஏதுவாக இன்னொரு தொகுதி அடையாளம் காணப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி புத்ராஜெயா வான்வெளியில் தவழும் அரசியல் பரபரப்பு இதுதான்.

இப்பொழுதோ அல்லது எப்பழுதோ என்று கடந்த பதின்மூன்றாவது பொதுத் தேர்தலைப் போலவே எதிர்வரும் பொதுத்தேர்தலும் நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டிருந்தாலும், தேர்தல் என்னவோ உறுதியிலும் உறுதி!

அப்படிப்பட்ட 14-ஆவது பொதுத் தேர்தலில் கேமரன்மலைத் தொகுதியில் போட்டி இடுவதற்காக மஇகாவும் மைபிபிபி என்னும் மமுக-வும் அண்மைக் காலமாக முட்டி மோதி வருகின்றன. உள்ளபடியே, இந்தத் திருவிளையாடலை மெல்லத் தூண்டிவிட்டு சற்றே தள்ளி நின்று நமட்டுச் சிரிப்பை தன் இதழோரம் சிந்தியபடி வேடிக்கை பார்த்து வருபவர் தேசிய முன்னணி பெரியண்ணனின் பெருந்தலைவர்தான்.

அவர் நினைத்திருந்தால், தன்னுடைய கைப் பிடிக்குள் அடங்கியுள்ள சுப்பிரமணியத்தையும் கேவியஸையும் எப்பொழுதோ அடக்கி வைத்திருக்கலாம்.  இருந்தாலும், இந்த இரு கட்சியின் தலைமைப் பீடங்களை ஆழம் பார்க்கவே தேசிய முன்னணி தளபதியான அவர் இத்தனைக் காலமும் விட்டுப் பிடித்தார்.

அத்துடன், தேசிய முன்னணியின் தலைமை தளபதிக்கு கேவியஸ்மீது ஏதோவோர் ஈடுபாடும் கரிசனையும் உள்ளது. இதை அறிந்த சுப்ராவுக்கும் நெருடல்தான்; இருந்தாலும் ஒன்றும் சொல்ல முடியாமலும் வெளியில் காட்டிக் கொள்ள முடியாமலும் பரிதவித்து வந்த அவர், தற்பொழுது ஒரு முடிவுக்கு வந்ததுடன் மனதையும் தேற்றிக் கொண்டுவிட்டார்.

மொத்தத்தில்,  ஏமாற்றத்திற்கு ஆளாகி இருப்பவர் டத்தோ சி.சிவராசாதான். கடந்த பொதுத் தேர்தலில் பேரா மாநில சட்டமன்றத்தில் கால் பதிக்கும் நோக்கத்தில் களம் கண்டு, வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட, இந்த முறை தேசிய அரசியலில் முழு மூச்சாக ஈடுபட முனைப்பு காட்டி வந்தார்.

கட்சியின் தேசியத் தலைமையும் அவருக்கு பச்சைக் கொடி காட்டியதுடன், அதற்கு இசைவாக கேமரன் மலைத் தொகுதியைக் கைக்காட்டியது.

மனதிற்குள் துள்ளிக் குதித்த சிவராசாவின் மகிழ்ச்சி கொஞ்ச நாள்கூட நிலைக்கவில்லை. ‘காத்திருந்தவன் காத்திருக்க, நேற்று வந்தவன் கரம்பற்றினான்’ என்ற கதைபோல கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டதாகவே எண்ணச் சிறகை விரித்த வந்த நிலையில், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக மண்ணின் மைந்தன் என்னும் பெருமிதத்துடன் நான்தான் களமிறங்கப் போகிறேன் என்று கேவியஸ் அதிரடியாக அறிவித்த நாள், நிம்மதியைத் தொலைத்து வந்த சிவராசா தற்பொழுது மாற்று ஏற்பாட்டை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.

பகாங் மாநிலத்தில் மஇகா-விற்காக இதுவரை ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியை, இந்த முறை நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஒதுக்க இருப்பதாக தேசிய முன்னணி தலைமை முடிவு செய்திருப்பதாகவும் இதற்கு மஇகா தரப்பில்  அரை மனதுடன் இசைவு தெரிவித்ததாகவும் தகவல் கசிந்துள்ளது.

அந்த மாநிலத்தில் ஏற்கெனவே வி.எஸ்.மோகன் தெலுக் கெமாங் தொகுதியில் மையம் கொண்டுள்ள நிலையில், தற்பொழுது அந்த மாநிலத்தில் இந்திய வாக்காளர்கள் சற்று அதிகமாக இருக்கும் தொகுதி அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அதில்தான் சிவராசா களமிறங்க உள்ளதாகவும் தெரிகிறது.

முற்றிய கத்தரிக்காய சந்தைக்கு வந்தேத் தீரும். அதைப்போல சிவராசா அடுத்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவது நெகிரி செம்பிலானிலா அல்லது பகாங்கில்தானா என்பதெல்லாம் வாக்காளப் பெருமக்களுக்கு பகிரங்கமாகத் தெரியப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.