வெள்ள நிலையை நேரில் காண, துணைப் பிரதமர் பினாங்கு சென்றார்

வெள்ள நிலையை நேரில் கண்டறிய, பினாங்கு மாநிலம் சென்ற துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடியை, மாநில முதல்வர் லிம் குவான் எங் இன்முகத்துடன் வரவேற்றார். அவருடன் டிஏபியின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கும் உடன் இருந்தார்.

“நாங்கள் வெவ்வேறு கருத்துகள் மற்றும் அரசியல் பாதை கொண்டிருந்தாலும், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பினான்கு மக்களுக்கு உதவ ஒன்றிணைவோம்,” என்று, இன்று கப்பளா பாதாசில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அவர் கூறினார்.

“வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மத்திய அரசின் ஒத்துழைப்பும் உதவியும், அவர்கள் மலேசியர்கள் என்ற முறையிலேயே.”

மேலும், பெர்லிஸ், கெடா, பேராக் மாநில மக்களையும் கனத்த மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

வானிலை ஆய்வகத்தின் கூற்றுபடி, பலத்த காற்றும் அடை மழையும், குறிப்பாக வடமேற்கு மாநிலங்களில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை தொடரும் எனத் தெரிகிறது.

இவ்வாண்டு இறுதியில் சபா, சரவாக் மாநிலங்களிலும் இந்நிலை ஏற்படலாம் என எங்களுக்கு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளத்தை எதிர்கொள்வதில் பினாங்கின் தயார்நிலையை 7/10 விகிதம் என வகைபடுத்தியுள்ள ஷாஹிட், இன்னும் சரிசெய்ய வேண்டியத் தேவைகள் அதிகம் இருப்பதாகவும் கூறினார்.

கடந்த சனிக்கிழமை, கனத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பினாங்குத் தீவின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இன்றைய நிலவரப்படி, சுமார் 4,000 மக்கள் துயர்துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர், எழுவர் வெள்ளத்திற்குப் பலியாகி உள்ளனர்.