ஏசுவின் சிலை உடைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது

 

மலாக்கா மாநிலத்தில் போர்ச்சுகீஸ் குடியிருப்பில் ஏசுநாதர் சிலையின் பிரதி உடைக்கப்படுவது மந்திரி பெசார் இட்ரீஸ் ஹருனின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனால், இந்த நிறுத்தி வைப்பு தற்காலிகமானதே என்று மலாக்கா வரலாற்று நகரமன்ற (எம்பிஎம்பி) உறுப்பினர் ஜோசெப் சாந்தா மாரியா கூறியதாக தெ ஸ்டார் செய்தி கூறுகிறது.

முதலமைச்சருக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும் என்று கூறிய சாந்தா மாரியா, இச்சிலையை அமைக்கும் பணி முறையான அனுமதி இன்றி செய்யப்பட்டது என்றார்.

இந்தக் குடியிருப்பில் இச்சிலையை அமைக்கும் பணியை முறையான அனுமதி இல்லாமல் மேற்கொண்டது எங்களுடைய தவறு என்பதை ஒப்புக்கொள்வதாக சாந்தா மாரியா தெரிவித்தார்.

இச்சிலையை இன்று உடைத்துத்தள்ள வேண்டும் என்று எம்பிஎம்பி உத்தரவிட்டிருந்தது.

இவ்வாண்டின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக போர்ச்சுக்கீசிய சமுகத்தின் தலைவர்கள் இச்சிலையை ரியோ டி ஜெனிரோவிலுள்ள ஏசுநாதர் சிலையின் அடைப்படையில் அமைத்தனர்.

500 ஆண்டுகால ரோமன் கத்தோலிக்கச் சமயக் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் தீபமாக இச்சிலை அடையாளம் காணப்படுவதை சமூகத் தலைவர்கள் விரும்பினர் என்றாரவர்.

இதற்கானத் திட்டம் கடந்த செப்டெம்பரில் எம்பிஎம்பியிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. ஆகவே, இச்சிலை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்குமுன் தயாராக வேண்டும் என்பதால் நிர்மாணிப்பு வேலை முன்னதாகவே தொடங்கியது என்று சாந்தா மாரியா விளக்கம் அளித்தார்.