தமிழ் சினிமா வியாபாரத்துக்கு திருப்புமுனை தந்த ‘தளபதி’க்கு 26 வயசு

தமிழ் சினிமா வியாபாரத்தில் 1991, நவம்பர் 5 திருப்பு முனை நாள். தமிழ் படங்களின் வியாபார எல்லையை விரிவடையச் செய்து வருமானத்தை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையூட்டிய ‘தளபதி’ ரிலீஸ் ஆன நாள் அது.

படம் வெளியாகி 26 ஆண்டுகளாகின்றன இன்றோடு. இந்தப் படம் செய்த சாதனைகள் இன்றைய தலைமுறைக்கு தெரியாமல் போயிருக்கலாம் என்பதற்காக இந்த ஃப்ளாஷ்பேக்.

ரஜினிகாந்த், மம்முட்டி, மணிரத்னம் என நட்சத்திர கூட்டணி இணைந்த முதல் தமிழ் படம் தளபதி. இப்படத்தின் மூலம் கேரளாவில் தமிழ் படங்களுக்கு என்று பெரும் பார்வையாளர்களை ஏற்படுத்திய படம் தளபதி.

மலையாள ரசிகர்கள்

மலையாளப் படங்களின் மெகா ஸ்டார் மம்முட்டிக்கு தமிழகத்தில் கதாநாயக அந்தஸ்தையும், ரசனை மிக்க பார்வையாளர்களை பெற்றுத் தந்த படம் தளபதிதான்.

100 நாட்கள்

நிர்வாக வசதிக்காக 9 ஏரியாக்களாக திரைப்பட விநியோகஸ்தர்கள் தமிழகத்தை அடையாளப்படுத்தி வியாபாரம் நடைபெற்று வந்த தமிழ் சினிமாவில் 35 பிரிண்டுகள் மட்டுமே ரீலீஸ் செய்யப்பட்டு வந்தது. இந்த கட்டுப்பாட்டை உடைத்து தமிழகமெங்கும் 50 தியேட்டர்களில் ரீலீஸாகி வெற்றி பெற்று 100 நாட்கள் ஓடிய படம் என்ற பெருமைக்குரியது தளபதி. கர்நாடகாவில் 5 தியேட்டர்களில் தமிழ் படங்கள் வெளியிடவே தடுமாறியபோது 25 தியேட்டர்களில் வெளிவந்து புதிய வசூலையுகாட்டி வியாபார எல்லை விரிவடைய செய்த படம் தளபதி.

ரஜினி – மம்முட்டி ஸ்பெஷல்

தமிழக சூப்பர் ஸ்டாருடன் மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்முட்டி நடித்திருந்ததால் கேரளாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது தளபதி படம். மலையாள படம் ரீலீஸ் செய்யப்படும் அனைத்து சென்டர்களிலும் தளபதி வெளியிடப்பட்டு வெற்றி பெற்ற தளபதி படம் தமிழ் சினிமாவுக்கு மலையாள தேசத்தில் தனி பார்வையாளர்களையும், கெளரவத்தையும் பெற்றுத் தந்தது.

பிரமாண்ட ரிலீஸ்

உலகமெங்கும் 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஒரே நாளில் திரைக்கு வந்த முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய படம் தளபதி. தினசரி நான்கு காட்சிகளை தவிர்த்து ரசிகர்களுக்கு என சிறப்புக் காட்சி திரையிடும் புதிய நடைமுறையை அமுல்படுத்திய பெருமையும் தளபதிக்குத்தான்.

அதிகாலைக் காட்சிகள்

தமிழகத்தில் காலை 10.30 மணிக்கு காலை காட்சி தொடங்கும். அதற்கு முன்பு யாராலும் படம் பார்க்க முடியாது. அதனை மாற்றி அதிகாலை 3 மணி சிறப்புக் காட்சி என்கிற புதிய நடைமுறையை தமிழ் சினிமாவிற்கு அடையாமை காட்டிய முதல் தமிழ்படம் தளபதி. சிறப்பு காட்சி பார்த்து வருபவர்களுக்காகவே ‘தளபதி ஸ்பெஷல்’ போர்டு போட்டு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்ட பெருமைக்கு உரிய படம் தளபதி.

ரஜினி சம்பளம்

தமிழ் படங்களில் நாயகனாக நடிக்க ரஜினிகாந்த் வாங்கி கொண்டிருந்த சம்பளத்தை தளபதி பட வெற்றி உறுதியான பின்பு இரட்டிப்பாக கொடுத்தார் தயாரிப்பாளர் என்பது இன்னொரு சிறப்பு.

-ராமானுஜம்

tamil.filmibeat.com