நவம்பர் 7 2017 – அக்டோபர் புரட்சியின் 100-வது ஆண்டு நிறைவு விழா

அக்டோபர் புரட்சியின் 100-வது நிறைவாண்டு இன்று.

அக்டோபர் புரட்சி 1917-ல் ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சிகர நடவடிக்கைகளின் சிறப்பம்சமாக இருந்தது, இது பிப்ரவரி புரட்சிக்குப் பின்னர், அந்த ஆண்டின் மார்ச் மாதம் தொடங்கியது.

நவம்பர் 7, 1917 (அந்நேரத்தில் ரஷ்யாவில் பயன்படுத்தப்பட்ட ஜூலியன் காலண்டர்படி அக்டோபர் 25, 1917) அன்று, பெட்ரோகிராட் புரட்சி போராளிகளும் (அதாவது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்), சோவியத் தொழிலாளர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் உட்பட (தொழிலாளர் குழுக்கள்) அனைவரும், அரசாங்கத்தின் முக்கியக் கட்டிடங்களான அஞ்சலகம், இரயில் நிலையங்கள், மின்சார உற்பத்தி நிலையங்கள், தேசிய வங்கிகள், மத்தியத் தொலைபேசி நிலையம், அரசாங்க அலுவலகங்கள் என அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தனர்.

நவம்பர் 8, 1917 அதிகாலையில், சிவப்பு காவலர்கள் (ரெட்) போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் இணைந்து, குளிர்கால அரண்மனையைத் தாக்கி, அங்கே பணியிலிருந்த காவலர்களின் எதிர்ப்பு எதுவுமின்றி அரண்மைனையைக் கைப்பற்றினர். பெட்ரோகிராட் நகரில் இருந்த குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றியது, புரட்சியின் வெற்றி அடையாளமாக இருந்தது.

சோவியத் காங்கிரஸ், ‘தொழிலாளர், வீரர்கள் மற்றும் விவசாயிகளுக்காக’ எனும் தீர்மானத்தை நிறைவேற்றியது. அப்பகுதியின் அனைத்து அதிகாரமும் தொழிலாளர்கள், வீரர்கள் மற்றும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வெளியிட்டது. பெட்ரோகிராடில் நடந்த, புரட்சிகர அதிகார கைப்பற்றுதலில் யாரும் கொல்லப்படவில்லை. ஏனென்றால், அந்த நேரத்தில் பெட்ரோகிராட் மக்கள் ஏகாதிபத்தியப் போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து, சோவியத் அரசாங்கத்தை உருவாக்க விரும்பினர்.

முதலாம் உலகப் போரில், அதன் ஈடுபாட்டைத் தொடர பிடிவாதமாக இருந்த ரஷ்யாவின் தற்காலிக அரசாங்கம் எளிதில் வீழ்ந்துவிட்டது. சாதாரண குடிமக்கள், தொழிலாளர்கள் மற்றும் இராணுவத்தின் ஆதரவைப் பெற்று, சோவியத் மற்றும் போல்ஷிவிக்குகள் புரட்சியை வழிநடத்தினர்.

தற்காலிக அரசாங்கம் தப்பிப்பிழைக்க முடியாது என்பதை உணர்ந்து, அதன் தலைவர் அலெக்ஸாண்டர் கெரென்ஸ்கி, பெட்ரோகிராடிலிலிருந்து வட ரஷ்யாவிற்குத் தப்பி ஓடினார். அங்குப் புரட்சியை எதிர்த்து ஒரு தாக்குதலை நடத்த அவர் திட்டம் தீட்டினார்.

ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த இரஷ்யப் புரட்சி, சாதாரண மக்களாலும் அதிகாரத்தைக் கையில் எடுக்க முடியும், முதலாளித்துவமின்றி புதிய சமூகங்களை உருவாக்கும் திறனைப் பெற முடியும் என்பதை வரலாற்று பூர்வமாகக் காட்டியது.

இரஷ்ய மக்கள், த்ஷார் ஆட்சி அதிகாரத்தை வீழ்த்தியது மட்டுமின்றி, புரட்சிகர நடவடிக்கைகளையும் தொடர்ந்தனர், மேலும் முதலாளித்துவ ஜனநாயகத்தை ஒழித்து, மக்கள் ஜனநாயக உருவாக்கினர். ஏகாதிபத்தியப் போரைத் தொடர விரும்பிய தற்காலிக அரசாங்கத்தைத் தூக்கி எறிந்து, இறுதியாக, தொழிலாளர் வர்க்கம் மற்றும் கீழ்மட்ட மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கொண்டுவந்தனர்.

ஜனநாயகம் மற்றும் புரட்சிகர படைப்பாற்றலின் விளைவே ரஷ்ய புரட்சியாகும். இந்த மாபெரும் புரட்சி, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் வர்க்கம் மற்றும் கீழ்மட்ட மக்களுக்கு , உலக சோசலிச சமுதாயத்தை உருவாக்க நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்தது.

இருப்பினும், வலதுசாரி பிற்போக்குவாதிகள் மற்றும் ஏற்கனவே இருக்கும் அமைப்புக்கு ஒரு மாற்றீட்டை கொடுக்க பயந்த ஏகாதிபத்திய சக்திகள், தங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பாத காரணத்தால், மிருகத்தனமான எதிர்-தாக்குதலை ஆரம்பித்து, பெரிய உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுத்தனர்.

சோவியத் ஒன்றியத்தின் புரட்சிகர அலையின் தோல்வியும், சோவியத் ஒன்றியத்தில் பெருகிவந்த அதிகாரத்துவ வர்க்கத்தின் சக்தியும், அக்டோபர் புரட்சிக்குத் துரோகமிழைத்து, இன்று நாம் சோவியத் ஒன்றியத்தின் வரலாற்றில் காணும் அதிகாரத்துவ அரசாங்கத்தைத் தோற்றுவித்தது.

ரஷ்யப் புரட்சி, குறிப்பாக அக்டோபர் புரட்சி, உலகளாவிய மனித சமுதாயத்திற்கும் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும், உற்சாகம் அளித்ததோடு விலைமதிப்பற்ற பங்களிப்புகளையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.  அவற்றுள் :-

  • அக்டோபர் புரட்சி, கீழ்மட்ட மக்கள் சக்தியை ஒழுங்கமைத்து மேற்கொள்ளப்படும் போராட்டத்தால், வரலாற்றை உருவாக்க முடியும், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவிதியை மாற்ற முடியும் என்பதை நிரூபித்தது.
  • அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் உருவான சோவியத் யூனியன், மக்களிடையே செல்வத்தை உருவாக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் முதலாளித்துவ அமைப்பு தேவை இல்லை என்பதை நிரூபித்தது.
  • அக்டோபர் புரட்சி உலகின் அதிகார சமநிலையை மாற்றியதோடு, முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. இரண்டாம் உலகப்போரின் போது பாசிச / நாஜி சக்திகளின் விரிவாக்கத்தை தோற்கடிப்பதிலும் மிக முக்கிய பங்காற்றியது. சோவியத் யூனியன் வீரர்கள் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பெரும் தியாகம் செய்துள்ளனர்.
  • சோவியத் யூனியன் மறைமுகமாக ஐரோப்பிய கண்டத்தின் நலன்புரி அரசு (charity country) உருவாக ஊக்குவித்தது. சோவியத் ஒன்றியத்தின் தோற்றம், மேற்குலகில் முதலாளித்துவ நாடுகளுக்கு உண்மையான சவாலை கொடுத்துள்ளது. முதலாளித்துவ அமைப்பு முறையை கவிழ்க்கும் திறன் கொண்ட தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியைத் தடுக்க, முதலாளித்துவ நாடுகள், சமூக-பொருளாதார முறையை மாற்றியமைக்க வேண்டியக் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன. ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் போராட்டம், தொழிலாளர்களுக்கு வசதியான மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும் நலன்புரி அரசு அமைய வழிவகுத்ததோடு, சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு, ஐரோப்பிய ஒன்றிய ஆதிக்க வர்க்கத்திற்கு பயத்தையும் ஏற்படுத்தியது.
  • அக்டோபர் புரட்சி, ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக போராட, மூன்றாம் உலக மக்களுக்கு தூண்டுதலாக இருந்தது.

அக்டோபர் புரட்சி நடந்து, 100 வருடங்கள் கடந்து விட்டபோதிலும், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு உலகளாவிய எதிர்ப்பானது தொடர்கிறது. 1990-களில், சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பின்னர், உலக முதலாளித்துவ சக்திகள், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைச் சாதாரண மக்களிடம் நடைமுறைபடுத்தி தங்களது சுயரூபத்தைக் காட்டின.

முதலாளித்துவத்திற்கு நாட்டின் எல்லைகள் இனி இருக்காது என்றபோதிலும், உலக வல்லரசுகள் தங்களின் முதலாளித்துவ நாடுகளைப் பாதுகாக்க போட்டியிடுவதால், ஏகாதிபத்தியப் போர் அச்சுறுத்தல் இன்னமும் இருக்கவே செய்கிறது.

அக்டோபர் புரட்சி, சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் பாரம்பரியத்தையும், தீவிரவாத எண்ணங்களையும் விட்டுச் சென்றுள்ளது. வர்க்க அடக்குமுறை மற்றும் மிரட்டல்களில் இருந்து அடிமட்ட மக்களை விடுதலை செய்வது, முதலாளித்துவ ஆட்சியை எதிர்ப்பது ஆகியன அடிமட்ட மக்களின் போரட்டங்களின் வழியே நடைமுறைபடுத்த முடியும்.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், நகர்ப்புற ஏழைகள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து போராட, அக்டோபர் புரட்சி ஊக்குவிக்கும் என்பது திண்ணம்.

 

எழுத்து :- ச்சூ சுன் காய் (பி.எஸ்.எம்.  சர்வதேசப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்)

தமிழாக்கம் : சாந்தலட்சுமி பெருமாள்