அன்வாருக்குச் சிறந்த சிகிச்சை வழங்கப்படும், துணைப் பிரதமர் உறுதியளித்தார்

சிறைச்சாலையில் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பிகேஆர் தலைவர், அன்வார் இப்ராஹிமுக்கு அரசாங்கம் சிறந்த சிகிச்சையை அளிக்கும் எனத் துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடி உறுதியளித்தார்.

ஞாயிறன்று, தோள்களில் அறுவை சிகிச்சைக்குத் திட்டமிடப்பட்ட அன்வாருக்கு, நிபுணத்துவ மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.

“பொருத்தமான, நிபுணத்துவ மருத்துவர்களால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, தொடர்ந்து அவ்வாரே பிந்தைய சிகிச்சையும் நடைபெறும் என்பதை உறுதிசெய்ய நான் விரும்புகிறேன்.

“அறுவை சிகிச்சைக்குப் பிறகு, விரைவில் அவர் குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்,” என்றும் ஷாஹிட் கூறினார்.

செப்டம்பர் இறுதியில், சுங்கை பூலோ சிறைக்குச் செல்லும் வழியில், அன்வார் ஒரு கார் விபத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பான  ஜி மணிவண்ணன் (பிகேஆர்-காப்பார் எம்.பி.) வினாவிற்கு  பதிலளித்த போது, அவர் இவ்வாறு கூறினார்.

அன்வாரின் குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, 2014 முதல் அன்வார் தோள் பிரச்சனைக்கு ஆளாகி இருப்பதாகவும், செப்டம்பர் விபத்துக்குப் பிறகு அது மோசமானது என்றும் தெரியவருகிறது.

அந்த முன்னாள் எதிர்க்கட்சி தலைவரின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு இருக்கக்கூடாது என உறுதியளிக்குமாறு, அவர்தம் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.

இதற்கிடையே, அந்த விபத்து குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருவதாகவும், அச்சம்பவத்தில் யாரேனும் குற்றவாளி எனக் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்க அரசாங்கம் தயங்காது என்றும் ஷாஹிட் கூறினார்.

“அந்த விபத்து குறித்த விசாரணையை நான் போலிசாரிடமே விட்டுவிடுகிறேன்,” என்றும் அவர் மேலும் கூறினார்.