இந்தியாவுடன் எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் சீனா தகவல்

பெய்ஜிங், இருநாட்டு எல்லை விவகாரம் தொடர்பாக சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தையை நடத்துகிறார். இதுவரையில் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா – சீனா இடையே 19 முறை பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது. சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சான்யிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எல்லை பிரச்சனைக்கு இந்திய மற்றும் சீன நாட்டு தலைவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், இப்பிரச்சனையை தீர்க்க நாங்கள் அதிகமான நடவடிக்கையை எடுத்து உள்ளோம்,” என கூறிஉள்ளார்.

“கடந்த முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற போது சிறப்பு பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்கள். நேர்மறையான நகர்வை உருவாக்கினர். பேச்சுவார்த்தை சிறப்பாக செல்கிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இவ்வருடம் நடைபெற தேதி மற்றும் நேரத்தை இருதரப்பும் முடிவு செய்யவேண்டும்,” என கூறிஉள்ளார்.

இந்தியா, சீனா, பூடான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் ஆக்கிரமிப்புக்கு முயற்சித்த போது இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனால் டோக்லாமில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் 73 நாட்களாக போர் பதற்றம் நிலவியது. இதனையடுத்து ராஜ்யரீதியில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை காரணமாக பதட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த 73 நாட்கள் மோதல் போக்கை அடுத்து இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே முதல் முறையாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

விரைவில் ரஷியா, இந்தியா மற்றும் சீன நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளின் பேச்சுவார்த்தையும் நடக்கிறது என சீன தெரிவித்து உள்ளது.

-dailythanthi.com

TAGS: