ஜாஹிர் நாயக் விரையில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்!

ஞாயிறு’ நக்கீரன், நவம்பர் 10, 2017 – நாடுகடத்தப்படும் நடவடிக்கையில் தன்னுடைய நிலை நாளுக்கு நாள் இறுகுகிறது’ என்பதை ஏறக்குறைய உணர்ந்து கொண்ட சமய பிரச்சாரகர் முனைவர் ஜாஹிர் நாயக், இந்தியாவிற்குத் திரும்ப ஆயத்தமாகிறார் என்றே தெரிகிறது.

ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னம், இவரைப் பற்றி மலேசிய இந்திய சமுதாயத்தின் சார்பில் கண்டன குரல்கள் எழுந்தபோது, அது தேசிய முன்னணி மத்தியக் கூட்டரசிற்கு, யானையின் வாலில் சிற்றெறும்பு கடித்ததைப் போலவே இருந்தது. மலேசியாவில் காலங்காலமாக நிலவும் இன இணக்கத்திற்கும் சமய சகிப்புத்தன்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் ஜாஹிர் நாய்க் சமயப் பிரச்சாரம் என்ற பெயரில் பேசி வருகிறார் என்று ஹிண்ட்ராஃப் அலறியபோது, அது இலேசாக வீசும் காற்றினால் மரத்தின் உச்சிக் கிளையில் உள்ள இலை அசைவதைப் போன்ற நிலையைக் கூட மத்திய அரசிடம் எதிரொலிக்கவில்லை.

கடந்த 2016-ஆம் ஆண்டு, ஜூலை இரண்டாம் நாளில் வங்காள தேச தலைநகரம் டாக்காவில் உள்ள ஓர் உணவகத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதலில் ஒன்பது இத்தாலியர்கள், ஓர் அமெரிக்கர் உட்பட, 20 பேர் மடிந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய வாக்குமூலத்தில் ஜாஹிர் நாய்க் பேச்சால் கவரப்பட்டுத்தான் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்தனர்.

இத்தகைய சூழலில், இந்தியாவில் இருந்த இங்கு தப்பி வந்தவரும் சமய நிந்தனைப் பேச்சாளருமான  ஜாஹிர் நாய்க்கை மலேசிய அரசு கொண்டணைக்கும் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்றுகூட ஒரு கட்டத்தில் ஹிண்ட்ராஃப் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் தொடர்பில் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டபள்யு தில்லர்சனுக்கு ஹிண்ட்ராஃப் தலைவர் வேதமூர்த்தி அனுப்பிய கடித்தத்தில், “தீவிரவாத நடவடிக்கைக்காகவும் பண மோசடிக்காகவும் இந்திய அரசால் தேடப்படும் நபரான ஜாஹிர் நாய்க், மலேசியாவில் சுதந்திரமாக நடமாடுவதுடன் இஸ்லாமிய விரவுரையாளர் என்ற போர்வையில் பொது இடங்களிலும் பள்ளிவாசல்களிலும் பல்கலைக்கழங்களிலும் உரை நிகழ்த்த அனுமதிக்கப்படுகிறார். இப்படி உரை நிகழ்த்தும்போதெல்லாம பிற சமயங்களின்மீது நிந்தனை கருத்துகளையும் தீவிரவாதத்தை தழுவும் போக்கையும் வெளியிட்டு வருகிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மலேசியாவின் கிழக்குக் கரை மாநிலமான திரங்கானுவில்  வாழும் மக்களில் 95 விழுக்காட்டினராக இஸ்லாமியர்கள் இருக்கும் நிலையில், அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் ராஸிப் அப்துல் ரகுமான், ஜாஹிர் நாய்க்கிற்கு பிரத்தியேக தீவை வழங்கியுள்ளதுடன் அங்கு ஜாஹிர் நாய்க்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறவாரியத்தின் கிளையை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது. அத்துடன், மந்திரி பெசார் அகமட் ராஸிப், இந்த மண்டலத்தில் திரங்கானு மாநிலம் ஓர் இஸ்லாமிய மையமாக விளங்குவதற்கு ஏதுவாக இங்கு அமையவிருக்கும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறவாரியக் கிளை அமையும் என்று குறிப்பிட்டதாக மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா வெளியிட்ட செய்தியும் இங்கே நினைவுகூரத்தக்கது.

தொடர்ந்து, மஇகா-வில் இருந்தும் மற்றும் பல தரப்பினரிடம் இருந்தும் ஜாஹிர் நாயக்கிற்கு எதிராக அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அப்பொழுதெல்லாம் தேசிய முன்னணி அரசு கடுகளவுகூட பொருட்படுத்தியதில்லை. ஜாஹிர் நாயக்கிற்கு நிரந்தர வசிப்பிடத் தகுதி வழங்கப்பட்டிருப்பதாக உலவும் தகவல் உண்மையா என்பதை உள்துறை அமைச்சர் என்ற வகையில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையையும் தேசிய முன்னணி அப்பட்டமாக அலட்சியம் செய்தது.

தற்பொழுது, பணமோசடி தொடர்பாகவும் தீவிரவாத நடவடிக்கை தொடர்பாகவும் ஜாஹிர் நாயக் மீது இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ள நிலையில்,  அவரின் சொத்துக்களும் கடப்பிதழும் முடக்கப்பட்டள்ளன. போதாக் குறைக்கு ஜாஹிர் நிறுவிய சமய பயிற்சி நிறுவனமும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரை மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்த மேற்கொள்ளப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கையும் முடியும் தறுவாயில் உள்ளது.

அதனால்தான், ஜாஹிர் நாயக்கைப் பற்றி ஒவ்வொன்றாக உள்துறை அமைச்சர் சொல்லி வருகிறார். மற்ற நாட்டினருக்கு வழங்கப்படுவதைப் போலத்தான் ஜாஹிர் நாயக்கிற்கும் நிரந்தர வசிப்பிடத் தகுதி வழங்கப்பட்டுள்ளதென்றும் அவருக்கென்று சிறப்பு சலுகை ஏதும் வழங்கப்படவில்லை என்றும் அவரின் பேச்சு கண்காணிக்கப்படுகிறதென்றும் இந்தியா கேட்டுக் கொண்டால் ஜாஹிர் நாய்க் அந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் ஒன்றன்பின் ஒன்றாக ஜாஹிட் ஹமிடி சொல்லி வருகிறார்.

எது எவ்வாறாயினும், இந்திய அரசு ஜாஹிட் நாயக்கை தன் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை நிறைவு செய்து விட்டதாகத் தெரியும் தற்போதைய நிலையில், ஜாஹிர் நாயக்கும் இதை அறிந்து, சூழ்நிலையை உணர்ந்துதான் இந்தியாவிற்குத் திரும்ப ஆயத்தமாகி வருகிறார் என்றேத் தெரிகிறது. நிலைமை என்னவாயினும், இனி கொஞ்ச காலத்திற்கு உலகின் பார்வையில் குறிப்பாக சமயம் கலந்த அரசியல் மேடையில் ஜாஹிர் நாயக் உலா வருவார் என்று எதிர்பார்க்கலாம்.