மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன், நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு

கொல்கத்தா,

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டுவிட்டர் மூலம் தமிழக  அரசை விமர்சித்து வந்த  நடிகர் கமல்ஹாசனும் அரசியல் களத்தில் குதித்து உள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல்ஹாசன் சந்தித்துப்பேசினார். பின்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.

சமீபத்தில் நற்பணி இயக்கத்தினர் தன்னுடன் தொடர்பில் இருக்கும் வகையில் ‘மய்யம் விசில்’ என்ற செயலியை நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். மேலும், கட்சி தொடங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக கூறினார்.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க கமல்ஹாசன் கொல்கத்தா சென்றார்.  காலை 11.15 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்ற கமல்ஹாசன் விமானம் மூலம் கொல்கத்தா  சென்றார்.

கொல்கத்தா விமான நிலையத்தில் பேட்டி அளித்த கமல்ஹாசன்  மம்தா பானர்ஜியை சந்திப்பதில் அரசியல்  எதுவும் இல்லை  என கூறினார்

கொல்கத்தாவில் நடைபெற்ற சினிமா விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனை  மம்தா பானர்ஜி வரவேற்றார். இந்த விழாவில்  நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-dailythanthi.com