அம்பிகா விசாரணை நியாயமானதே, ஐஜிபி கூறுகிறார்

 

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் யுகேயில் சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரௌனுக்கு எதிராகத் தொடர்ந்துள்ள வழக்கு சம்பந்தமாக மலேசிய வழக்குரைஞர் அம்பிகா சீனிவாசனுக்கு எதிராகச் செய்யப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் போலீஸ் விசாரணையை போலீஸ் நியாயப்படுத்தியுள்ளது.

அம்பிகாவுக்கு கொடுக்கப்படும் தொந்தரவு அல்லது அச்சுறுத்தல் ஆகிய செயல்களை மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

அதற்கு எதிர்வினையாற்றிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) முகம்மட் பூஸி ஹருண், வழக்குரைஞர் மன்றம் கூறியது குறித்து நாங்கள் கருத்துரைக்க விரும்பவில்லை. இரண்டு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. அது முக்கியமானதாகும். நாங்கள் புலன்விசாரணையைத் தொடங்க வேன்டும் என்று செராஸில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

வழக்கமான நடைமுறைக்கேற்ப, விசாரணை அறிக்கைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக தாக்கல் செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

நாங்கள் விசாரித்தாலும் குறை சொல்வார்கள்; விசாரிக்காவிட்டாலும் குறை சொல்வார்கள்.

ஆனால், மக்கள் புகார் செய்துள்ளனர். நாங்கள் அதற்கு அங்கீகாரம் அளித்து குற்றச்சாட்டின் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஐஜிபி கூறினார்.

“அக்குற்றச்சாட்டு மிகக் கடுமையானது – சிறிய தொகை கொடுத்ததாகக் குற்றம் சாட்டவில்லை (ஆனால்) ரிம90 மில்லியன்”, என்று அவர் மேலும் கூறினார்.

அம்பிகாவின் அறிக்கைக்காக போலீஸ் இன்னும் அவரை விசாரணைக்கு அழைக்கவில்லை என்பதை பூஸி உறுதிப்படுத்தினார்.

இது பற்றிய மிக அண்மைய நிலவரம் தமக்கு இன்னும் தெரிவிக்கப்படவிலை என்று கூறிய பூஸி. போலீஸ் அம்பிகாவிடமிருந்து வாக்குமூலம் எடுத்திருந்தால், அவர்கள் அதை நிச்சயமாகத் தம்மிடம் தெரிவித்திருப்பார்கள் என்றாரவர்.