சிரியாவில் ஐ.எஸ் அமைப்பைத் தோற்கடிக்க டிரம்ப், புதின் உறுதி

சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பு முழுமையாகத் தோற்கடிக்கப்படும் வரை அந்த அமைப்பினருடன் தொடர்ந்து போராட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புக்கொண்டுள்ளதாக ரஷ்ய அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், இது குறித்து அமெரிக்க அரசின் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.

சிரியாவில் ஆறு ஆண்டுகளாக நடக்கும் உள்நாட்டுப் போரில் அந்நாட்டு அரசின் முக்கியக் கூட்டாளியாக ரஷ்யா உள்ளது. ஆனால்அங்குள்ள அரபு மற்றும் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா ஐ.எஸ் அமைப்புக்கு எதிராகவும் 2014 முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

சிரியாவின் ராணுவம், குர்திஷ் மற்றும் அரபுப் படைகளால் ஐ.எஸ் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகள் சமீப காலமாக மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் மீட்கப்பட்ட ஐ.எஸ் ஆட்சி செய்த பகுதிகளின் தலைநகரமாக விளங்கிய ரக்கா நகரமும் அதில் அடக்கம்.

ராணுவ நடவடிக்கை தீர்வாகாது

வியட்நாமில் நடைபெறும் ஆசிய – பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின்போது டிரம்ப் மற்றும் புதின் சந்திக்கொண்டபின்னர், வல்லுநர்களால் இருதரப்புக் கூட்டறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

“சிரியாவில் நிலவும் நெருக்கடியைத் தீர்க்க ராணுவ நடவடிக்கைகள் தீர்வாகாது,” என்று இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும், “ஐ.எஸ் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு, அரபு நாடுகள், ரஷ்யா, மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி ஆகியோர் பங்கேற்றுவரும் சிரியாவுக்கான அமைதி பேச்சுவார்த்தைகளில் அனைத்துத் தரப்பினரையும் பங்கெடுக்க அழைப்பு விடுப்பதாகவும்” எந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டா நாங் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் 24 மணிநேரத்திற்குள் அவர்கள் டிரம்ப் மற்றும் புதின் ஆகியோர் மூன்று முறை சந்தித்துக்கொண்டனர்.

2016-இல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளதாக, டிரம்பின் முன்னாள் உதவியாளர்கள் மற்றும் அவரைச் சேர்ந்தவர்களை விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், ரஷ்ய அரசுடனான அவரது தொடர்பு, அவர் பதவியேற்றபின்பு தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுவருகிறது.

தேர்தலில் தலையீடு செய்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. -BBC_Tamil