ஸாகிட்: வெள்ளம் பினாங்கை மீண்டும் பிடிக்க கடவுள் காட்டிய சகுனம்!

 

பினாங்கை கெராக்கான் மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி அக்கட்சியின் பேராளர்களிடம் கூறினார். பினாங்கில் ஏற்பட்ட வெள்ளம் மீண்டும் கைப்பற்றுவதற்கு அந்த மாநிலம் பழுத்திருக்கிறது என்று கடவுளிடமிருந்து வந்த சகுனம் என்றார்.

“அது முடியாததல்ல. அதைச் செய்ய முடியும். பினாங்கு வெள்ளத்திலிருந்து விடுபட்டுவிட்டது என்று மார்தட்டியவர்களுக்கு கடவுள் பலத்த அடி கொடுத்திருக்கிறார்.

“இப்போது நடந்தது பினாங்கு அரசாங்கத்தை மீண்டும் பிடிப்பதற்கு இதுதான் சரியான நேரம் என்று கடவுள் தெரிவித்த சகுனம்”, என்று ஸாகிட் கெராக்கானின் 46 ஆவது தேசியப் பேராளர்கள் மாநாட்டில் இன்று பேசிய போது கூறினார்.

கடந்த சனிக்கிழமை பினாங்கை தாக்கிய பெரும் வெள்ளத்திற்கு ஸாகிட் இவ்வாறு கூறினார்.

இந்த வெள்ளத்தால் எழுவர் மாண்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக திறக்கப்பட்ட நிவாரண மையங்கள் வெள்ளம் முற்றிலும் வடிந்த பின்னர் நேற்றுதான் மூடப்பட்டன.