எம்பி சுரேந்திரன்: இந்தியர்களுக்கு அதிகாரமளித்தல் என்பது வெறும் வெற்று வாக்குறுதிதான்!

 

நேற்று ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி அரசாங்கம் மலேசிய இந்தியச் சமூகத்திற்கு அதிகாரமளிக்க வாக்குக் கொடுத்திருப்பதாக கூறினார்.

14 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பிஎன் தலைவர்களால் இது போன்ற பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே, ஸாகிட்டின் அதிகாரமளிக்கும் வாக்குறுதி இந்தியர்களிடம் நிலவும் நாடற்ற நிலைமை உடனடியாகத் தீர்க்கப்படும் வரையில் வெறும் வெற்று வாக்குறுதியாகவே இருக்கும்.

இதுதான் பிஎன் இந்திய மலேசியர்களுக்கு அளித்துள்ள மிகப் பெரிய வாக்குறுதி; இதுவரையில் அவர்கள் இச்சோதனையில் படுமோசமான தோல்வி கண்டுள்ளனர்.

மலேசிய இந்தியச் சமூகம் அதிகாரமற்றதாக இருப்பதற்கான மிகப் பெரிய காரணம் அவர்களின் நாடற்ற நிலைமையே.

(இந்தியர்களின்) நாடற்ற நிலைமையை மைடாப்தார் மற்றும் இந்தியச் சமூகத்திற்கான சிறப்பு அமலாக்க பணிப்படை (SITF) ஆகியவற்றின் மூலமாக கையாண்டிருப்பதாக பிஎன் அடிக்கடி கூறிக்கொண்டிருப்பது அடிப்படையற்றது என்பதோடு கிடைக்கக்கூடிய ஆதாரங்களுக்கு முரணானதாக இருக்கின்றன.

நாடற்ற இந்திய மலேசியர்களின் உண்மையான எண்ணிக்கை என்ன மற்றும் அவர் இருக்கும் இடங்கள் யாவை என்பன போன்றவற்றை நிர்ணயிப்பதற்கு ஒரு விசாலமான, தேசிய அளவில் அதிகாரப்பூர்வமான கணக்கெடுப்பை அவர்கள் செய்யாமல் இருக்கையிலும்கூட, இந்த விவகாரம் பெருமளவில் தீர்க்கப்பட்டு விட்டதாக எப்படி பிஎன் கூறிக்கொள்ள முடியும்?

பிஎன் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து ஊகித்தல் மற்றும் அனுமானம் ஆகியவற்றின் அடிப்படையில் கையாண்டு வரும் செயல்கள், நாடற்ற நிலைமையை முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் அவர்களின் வருந்தத்தக்க பொறுப்பின்மையைக் காட்டுகிறது.

 

பிஎன் இந்தப் பிரச்சனையை மைடாப்தார் மூலமாக தீர்த்துவிட்டது என்றால், ஏன் சமூகத் தலைவர்கள், சமுதாய ஆர்வலர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான சிவப்பு அடையாள அட்டைகள் வைத்திருக்கும் இந்திய மலேசியர்களை எதிர்பாராமல் திரும்பத் திரும்ப சந்திக்கின்றனர்?

பெடரல் அரசாங்கத்தின் முழு வளமும் அவர்களிடம் இருக்கையில், பிஎன் இப்பிரச்சனையை பேனாவின் ஒரே வரியில் தீர்த்திருக்க முடியும்.

ஸாகிட் உள்துறை அமைச்சர் என்ற முறையில், அனைத்து உண்மையான நாடற்ற இந்திய மலேசியர்களின் மனுக்களை எளிதாக்க வேண்டும் என்று உள்ளூர் தேசிய பதிவு இலாகாகளுக்கு உத்தரவிட வேண்டும் மற்றும் மிகத் தொலைவிலிருக்கும் இடங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி உண்மையான பிரச்சனையுடையவர்களை அடையாளங்கண்டு அவர்கள் மனுக்கல் தாக்கல் செய்ய உதவ வேண்டும்.

உண்மையான பிரச்சனையுடையவர்கள் கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும், சிவப்பு நாடா மற்றும் இல்லாத ஆதரவான ஆவணங்கள் வேண்டும் என்று செய்யமுடியாத கோரிக்கைகள் விடுவது போன்றவை நிறுத்தப்பட வேண்டும்.

 

மைடாப்தார் ஆற்றலற்றது

 

உள்துறை அமைச்சு இதைச் செய்ய வேண்டும், மைடாப்தார் அல்ல. அது ஓர் ஆற்றலற்ற மஇகாவுடன் இணைக்கப்பட்ட ஓர் அரசுசார்பற்ற அமைப்பு.

மேலும், அதிகாரமளித்தில் பற்றி பேசும்போது, உண்மையான நாடற்ற மனுதாரர்களின் கோரிக்களுக்கு ஆட்சேபனைகள் தெரிவிக்க ஏன் உள்துறை அமைச்சு அதன் வழக்குரைஞர்களுக்கு உத்தரவிடுகிறது, அந்த வழக்குகள் பெடரல் நீதிமன்றம் வரையில் செல்கின்றன, அங்கு வழக்குகள் இப்போது நிலுவையில் இருக்கின்றன?

இது வலது கை கொடுப்பதற்கு உறுதி அளிப்பதும், இடது கை அதைப் பறித்துக்கொள்வதற்கும் வழி வகுக்கும் முறையா?

எல்லாவற்றுக்கும் மேலாக, நீண்ட காலமாக இருந்து வரும் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பிஎன்னுக்கு அரசியல் திண்மையும் அக்கறையும் இருக்க வேண்டும்.

சுதந்திரமடைந்ததிலிருந்து ஆட்சியிலிருக்கும் ஒரே அரசாங்கம் என்ற முறையில், இந்திய மலேசியர்களின் நாடற்ற நிலைக்கு முழுப் பொறுப்பும் பதில் கூறும் கடமையும் பிஎன்னுடையதாகும்.

 

நூறு நாட்களுக்குள் தீர்க்கப்படும்

 

எதிரணி மத்தியில் அதிகாரத்தில் அமர்ந்தால், நாடற்ற இந்திய மலேசியர்களின் பிரச்சனையை நூறு நாட்களுக்குள் தீர்க்கும் என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

ஒரு முன்னாள் துணைப் பிரதமர் என்ற முறையில், நிருவாகத்தில் நீண்ட அனுபவமுடைய அவருக்கு இது சாதிக்கக்கூடிய ஒன்று என்று தெரியும். இதற்குத் தேவையானதெல்லாம் அரசியல் திண்மையும் பேனாவின் ஒரு வரியும்தான்.

இது போன்ற பொறுப்பேற்புப்பணிக்கு ஸாகிட் மற்றும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தயாராக இருப்பார்களா?