ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம்

ராமேஸ்வரத்தில் இருந்து சில நாட்டிகல் மைல் தூரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க வலைகளை கடலில் விரித்து கொண்டிருந்தனர். அப்போது மீனவர்களின் படகுகளை நோக்கி கடற்படையினர் வேகமாக சென்றுள்ளனர்.

இதையடுத்து அச்சமடைந்த மீனவர்கள் வலைகளைப் போட்டுவிட்டு அவசரமாக கரைக்கு திரும்ப முயற்சித்தனர். அப்படி திரும்ப முயன்ற மீனவர்கள் மீது ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி கடற்படையினர் துப்பாகிச் சூடு நடத்தியுள்ளனர்.

இத்துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பிச்சை என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு படகும் அதில் இருந்து மீனவர்களும் கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்படுவதாக கரைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் மீனவர் இருதயம் என்பவர் செய்தி சேனல் ஒன்றுக்கு கடலில் இருந்தபடியே பேட்டியளித்தார்.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த மீனவர்களை நமது கடற்படையினர் ஏன் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பது குறித்து மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

tamil.oneindia.com

 

TAGS: