சாதியக் கட்டமைப்பை உடைக்க, மாணவர்களை அரசியல் படுத்த வேண்டும் – பா ரஞ்சித்

சென்னை: சாதியக் கட்டமைப்பை உடைக்க, மாணவர்களை அரசியல் படுத்த வேண்டும் என்று இயக்குநர் பா ரஞ்சித் கூறினார். நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்” (Challenges In Education – Way Forward) என்ற தேசிய கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டு இந்த கருத்தரங்கில் உரையாற்றினர்.

இந்த கருத்தரங்கை ஒருங்கிணைத்திருந்த இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது:

இன்று தமிழகத்தின் மிக முக்கியமான தேவையாக இந்த நிகழ்வு. ஏனென்றால் இந்த சமூக நீதியற்ற, சமத்துவமற்ற கல்விச் சூழலில் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு, ஆதவன் தீட்சண்யா போன்ற சமூக ஆர்வலர்கள் நமக்குத் தேவை என்று நான் நினைக்கிறேன். இவர்கள் எல்லோரும்தான் நமக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமமில்லா கல்வி

தோழர் வசந்தி தேவி பேசும்போது, இங்கு கல்வியே சமம் இல்லாமல் இருக்கிறது. அதை நாம் சரி செய்யாமல் நீட் மாதிரியான எந்த ஒரு பொதுத் தேர்வு வந்தாலும், அது யாருக்கு அனுகூலமாக இருக்கும் என்பதை மிகத் தெளிவாக நமக்கு புரிய வைத்தார். முன்னெல்லாம் கல்வி கற்கவில்லை என்பது பிரச்சனையாக இருந்தது. இப்போது கல்வி கற்பது தான் பிரச்சினையாக இருக்கிறது. உதாரணத்திற்கு சட்டக்கல்லூரி மாதிரியான கல்லூரிகளில் ஒடுக்கப்பட்டவர்கள் அதிகம் படிக்கிறார்கள் என்பதால் அங்கு கட் ஆப் மார்க் அதிகமாக இருக்கும். இவர்கள் அடிமைப்பட்டு கிடந்த வடிவத்தையும் வெறுக்கிறார்கள், எழுச்சி பெறும் வடிவத்தையும் வெறுக்கிறார்கள்.

அரசியல்படுத்த வேண்டும்

பொதுவாக இன்றைக்கு கல்வி நிலையங்கள் என்னவாக இருக்கின்றன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இட ஒதுக்கீடு பெற்று படிக்கிறார்கள் என்று இங்கு கேலிக்குள்ளாக்கும் நேரத்தில்தான், மெரிட்டில் தேர்வாகும் மாணவர்களும் கொலைக்கு ஆளாகிறார்கள். ரோகித் வெமூலா, முத்துகிருஷ்ணன் முதல் கலைக்கல்லூரி மாணவன் பிரகாஷ் வரை கல்வி நிலையங்களில் நிலவும் சாதிய அரசியலால் மட்டுமே சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். சாதியக் கட்டமைப்பை உடைக்க, மாணவர்களை அரசியல் படுத்த வேண்டும்.

இடஒதுக்கீடு

தொடர்ந்து இட ஒதுக்கீடு குறித்த தவறான பிரச்சாரம் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. யார் யாருக்கு எவ்வளவு சதவீத இட ஒதுக்கீடு என்பதை முதலில் பொதுத்தளத்தில் விவாதத்திற்குள்ளாக்க வேண்டும். அப்போது தான் இட ஒதுக்கீடு என்பது எல்லோருக்குமானது என்ற புரிதலை நாம் ஏற்படுத்த முடியும். கல்வி சார்ந்த எழுச்சி என்பது நம் சமூகத்தில் நடைபெறவே இல்லை. தொடர்ந்து கல்வி நிலையங்கள் சமூகத்திற்கு தேவையான அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, மாணவர்களை வேலை செய்யும் இயந்திரங்களாக உற்பத்தி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.

இணைந்து எதிர்ப்பு

நீட் என்பது ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் மட்டுமே சந்திக்கப் போகிற பிரச்சினை இல்லை. நீட் ஒட்டுமொத்த மாணவர்களுக்கான பிரச்சினை. எனவே தான் நீட் தேர்வை எல்லோரும் இணைந்தே எதிர்த்தாக வேண்டிய மிக முக்கியமான தேவை இருக்கிறது.

சாதியாக பிரிந்திருக்கிறோம்

சாதியாக பிரிந்திருக்கிற இந்த சமூகத்திற்கு மாணவர்களையும் சாதியாளர்களாக உருவாக்குவதில் கல்வி நிலையங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அங்கே சமூக நீதி கல்வியே மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதில்லை. இன்றைக்கு என்னை சமூக வலைதளங்களில் சாதி ரீதியாக விமர்சிப்பவர்கள் கூட நன்கு படித்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பதிலிருந்து, நம் கல்வி நிலையங்கள் மாணவர்களை எப்படிப்பட்டவர்களாக உருவாக்குகிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ளமுடியும்.

சவால்கள்

இந்த மாதிரியான எல்லா சிக்கலையும் கடந்தே, நாம் எல்லோரும் நீட் தேர்விற்கு எதிராக போராட வேண்டிய தேவை இருக்கிறது. தமிழகத்தின் முற்போக்கு மாணவர்களும், இளைஞர்களும் இந்த விவாததையும், உரையாடலையும் பொதுத்தளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். கல்வி முன்னால் உள்ள சவால்களை அனைத்து மாணவர்களிடமும் விவாதத்திற்குள்ளாக்க வேண்டும். அது சமூக நீதி கல்வி குறித்தும், நீட் எதிர்ப்பு குறித்துமானதாக இருக்க வேண்டும்.

வேண்டாம் தேர்வு இப்போது நீட் மட்டுமல்ல இன்னும் இருக்கிற அத்தனை பொதுத் தேர்வு முறைகளும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு நாமெல்லாம் சாதியை ஒழித்து விட்டு ஒன்றிணைய வேண்டும். நம்மைப் போலவே சிந்திக்கிற நேச சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும். இது ஒரு மிகப்பெரிய வேலை தான், ஆனால் இங்கு குழுமியிருக்கிற முற்போக்கு மாணவர்களைப் பார்க்கும் போது அது நடக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

-இவ்வாறு அவர் பேசினார்.

தீர்மானங்கள் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

  1. நீட் ரத்து செய்யப்பட வேண்டும்.

  2. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விகிதாச்சாரத்திற்கு ஏற்ப தனி ஒதுக்கீடு

  3. கல்வியை மாநிலப் பட்டியலுக்குள் திரும்பவும் சேர்க்க வேண்டும்.

  4. கல்வியை உலக வர்த்தக நிறுவனத்தின் வரம்புக்குள் கொண்டு செல்லக்கூடாது.

tamil.filmibeat.com