வி.கே. லிங்கத்திற்கு ஆறு மாத சிறைத் தண்டனை, பெடரல் நீதிமன்றம் உத்தரவு

 

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக பெடரல் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு மூத்த வழக்குரைஞர் வி.கே. லிங்கத்திற்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நீதிபதிகளில் ஒருவர் ஒப்புதல் ஏதும் இன்றி தன்னுடையது போலவே, பிறருடைய கருத்துகளை, மொழியை, எண்ணங்களை தன்னுடையது போல் கையாளுதலில் சம்பந்தப்பட்டிருந்தார் (plagiarism) என்பது வி.கே. லிங்கத்தின் குற்றச்சாட்டு.

ஐந்து நீதிபதிகளின் ஏகமனதான இந்த முடிவை பெடரல் நீதிமன்ற நீதிபதி அபு சாமா நோர்டின் அறிவித்தார்.

தண்டனை நிறைவேற்றத்திற்கான உத்தரவு வெளியிடப்படும் என்று தீர்ப்பை வெளியிட்ட நீதிபதி அபு சாமா தெரிவித்தார்.

எனினும், இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகளின் போது லிங்கம் நீதிமன்றத்தில் இல்லை.

மலேசியாகினி தொடர்பு கொண்ட போது, லிங்கம் இப்போதைக்கு கருத்து ஏதும் கூற மறுத்து விட்டார். ஆனால், இன்றிரவு ஓர் அறிக்கை வெளியிடப்படும் என்று அவர் மேலும் கூறினார்.