அரசியல் ஆய்வாளர்கள் : இளைஞர்கள் பி.எஸ்.எம். கட்சியில் சேரவே விரும்புகிறார்கள்

அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள், தற்போது மலேசிய சோசலிசக் கட்சியில் (பி.எஸ்.எம்.) இணைவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இது குறித்து கருத்துரைக்கையில், “தற்போதைய உலக அரசியல் சூழ்நிலை அவ்வாறு இருக்கிறது, இளைஞர்கள் பிரதான அரசியல் கட்சிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து விலகி, தனித்துவமான, ஒரு மாற்று சிந்தனை கொண்ட அரசியல் கட்சியில் இணைய விரும்புகின்றனர்,” என்று அரசியல் ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலும், பி.எஸ்.எம்.  கட்சியில் சுமார் 300 இளைஞர்கள்  இணைந்துள்ளதாக சமீபத்தியப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக அக்கட்சியின் தேசியத் துணைப் பொதுச் செயலாளர் கே.எஸ்.பவானி ஃப்.எம்.தி.-யிடம் தெரிவித்தார்.

மற்றக் கட்சிகளுடன் ஒப்பிடுகையில், இது சிறிய எண்ணிக்கையாக இருக்கலாம்,  ஆனால், பி.எஸ்.எம். மிகவும் சிறிய ஒரு கட்சி என்பதை, இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றார் அவர்.

“ஒவ்வொரு மாதமும், 10 முதல் 20 இளைஞர்கள்,  ஆன்லைன் வழி கட்சியில் இணைந்துள்ளனர்.

“ஒவ்வொரு ஆண்டும்,  இளைஞர்களின் எண்ணிக்கையில் 20-30 % அதிகரிப்பு உள்ளது,” என்று அவர் கூறினார்.

பி.எஸ்.எம். புதிய உறுப்பினர்களில், பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பது ஒரு நல்ல அறிகுறியாகும் என்று அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் ஆ.சிவராஜன் தெரிவித்தார்.

அரசியல் மற்றும் சமூக ஆய்வாளர், வோங் சின் ஹூவாட் , “பி.எஸ்.எம்.-மில் நடப்பது, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உட்பட உலகின் மற்ற பகுதிகளிலும் நடக்கிறது,” என்று  கூறினார்.

“அமெரிக்காவில், பெர்னி சாண்டர்ஸ், புகழ் பெற்றது போல; பிரான்சில், ஜீன்-லூக் மெலன்கோன்-ஐ நீங்கள் பார்க்கலாம்,” என்று அவர் கூறினார்.

சாண்டர்ஸ் தன்னை ஒரு ஜனநாயக சோசலிசவாதி என்றும் ஒரு புதிய ஒப்பந்த கால முற்போக்கு அமெரிக்கர் என்றும் விவரிக்கிறார். உழைக்கும் வர்க்கத்தின் சார்புடைய அவர், பொருளாதாரச் சமத்துவமின்மையைத் திசை திருப்ப வலியுறுத்துகிறார். பல அறிஞர்கள் அவருடையக் கருத்துகளைச் சமூக ஜனநாயகமாகக் கருதுகின்றனர்.

பிப்ரவரி 2016-ல், பிரான்சில், ஓர் இடதுசாரி ஜனரஞ்சக மற்றும் ஜனநாயக சோசலிச அரசியல் கட்சியை மெலன்கோன் தொடங்கினார்.

உலக மயமாக்கல் எதிர்ப்பின் விளைவாக, தங்களின் விருப்பங்கள் கவனிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து, பிரதான கட்சியில் இருந்து கிளர்ச்சிகொள்ளும் மக்களும் இருக்கவே செய்கின்றனர்,” என்று வோங் மேலும் சொன்னார்.

இருப்பினும், பி.எஸ்.எம்.  இளைஞர்களிடையே பிரபலமடைய உள்ளூர் சம்பவங்களும் பங்களித்திருப்பதை வோங் ஒப்புக் கொண்டார். இதில், பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பன் ஆகிய இரு முக்கியக் கூட்டணிக் கட்சிகளில் நடப்பவையும் காரணங்களாகும்.

“நண்பர்கள் எதிரிகளாகவும், எதிரிகள் நண்பர்களாகவும் மாறுகிறார்கள். இது ஒரு கெட்ட விஷயம் அல்ல, ஆனால், இது ஏன் நடக்க வேண்டும் என்பதற்கான காரணத்தைக் கூறி, அவர்களின் ஆதரவாளர்களைச் சமாதானப்படுத்துவது போதுமானதாக இல்லை.

“இதனால், சற்று  குழப்பமடைந்தவர்கள், சற்று ஏமாற்றமடைந்தவர்கள், அக்கட்சிகளைத் துரோகிகள் என்று கருதுபவர்கள் மற்றும் பிற உணர்வுகள் கொண்ட மக்கள் இருக்கவே செய்கிறார்கள்.”

தேர்தல் நோக்கம் எதுவும் இல்லாமல், பி.எஸ்.எம். பல தரப்பட்ட வேலைகளைச் செய்து வருவதும் மற்றுமொரு காரணமென்று அவர் சொன்னார்.

“பி.எஸ்.எம்.-ஐ, நீங்கள் மற்ற கட்சிகளுடன் ஒப்பிட்டால், அவர்கள்  தேர்தல் நாற்காலி பகிர்வு அல்லது தேர்தல் பற்றிய விஷயங்களைப்  பேசமாட்டார்கள்.

“அவர்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லாததால், நாற்காலி பகிர்வு குறித்து பேச அவர்களுக்கு வாய்ப்பில்லை.

“இது  வினோதமான சித்தாந்தத்தைக் கொண்ட ஒரு கட்சியாகும், அவர்களின் வேட்பாளராக இருக்க நீங்கள்  விரும்பினால், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது நீங்கள் ஓர் இடத்தில் மக்கள் சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

“ஓர் இடத்தில் வெற்றிபெற, அவ்விடத்தில் பிரபலமான ஒருவரை நிறுத்தலாம் எனும் நோக்கமின்றி – கொள்கை ரீதியாக சிந்தித்து- அவ்விடத்தில் நாங்கள் பணியாற்றவில்லை, எனவே, அத்தொகுதி மக்கள் விரும்பினாலும் நாங்கள் அங்கு போட்டியிட மாட்டோம் என்கின்றனர், அதிலும் ஒரு கொள்கை உண்டு.”

“இந்தக் கட்சி தேர்தல் நலன்களைக் கருதாமல், மக்கள் பிரச்சினைகளை அடிக்கடி கையாள்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

“சில சந்தர்ப்பங்களில், அவர்கள் கையிலெடுக்கும் பிரச்சனைகள் எளிதானது அல்ல, அதற்காக அவர்கள் போராடியும் வருகிறார்கள். அவர்கள் தொகுதியில் இல்லாவிட்டாலும், அப்பிரச்சனைக்குத் தீர்வுகாண போராடுவார்கள் ….. எங்கும்.

“ஆக, இதன்வழி நாம் அறிவது என்னவென்றால், பி.எஸ்.எம். ஒரு சிறிய கட்சி, ஆனால், அவர்கள் பெரிய காரியங்களைச் செய்கின்றனர், அதனால் அவர்கள் வித்தியாசமாகத்  தெரிகின்றார்கள். இது சிலரை ஈர்க்கிறது என்று நான் நினைக்கிறேன். ”

பி.எஸ்.எம்.-இல் சேரும் இளைஞர்களில், அதிகமானவர்கள் மலாய்க்காரர்கள் என்று வோங் கருதுகிறார்.

“அது உண்மை என்றால், மலாய்க்காரர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்றே அர்த்தம்,” என அவர் சொன்னார்.

வோங்கின் சந்தேகத்தைப்  பவானி உறுதிப்படுத்தினார். பி.எஸ்.எம்.-இல் இணைந்த  இளைஞர்களில் 40% மலாய்க்காரர்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள்.

இதற்கிடையே, “போராட்ட எண்ணம் கொண்ட இளைஞர்களுக்கு வித்தியாசமாக ஏதாவது வேண்டும்,” என்று ஆவாங் அஸ்மான் கூறினார்.

மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, அரசியல் ஆய்வாளர் ஆவாங் அஸ்மான் பவி, உலகளாவிய ரீதியில் இளைஞர்கள் வித்தியாசமான ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் எனும் வோங்கின் கூற்றுடன் ஒத்துப்போனார்.

“போராட்ட எண்ணம் கொண்ட இளைஞர்கள், ஏதாவது வித்தியாசமான, உயர் வாழ்க்கை இலட்சியங்களைக் கொண்டிருக்கும் ஒன்றை எதிர்பார்க்கின்றனர்,” என்று ஃப்.எம்.தி-இடம் அவர் கூறினார்.

“மக்கள் மற்றும் சமத்துவ நலன்களைப் பற்றி சோசலிசம் நிறைய பேசுகிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

“சோசலிசம் இன்றைய அரசியலுக்கு மாற்றாக தோன்றுகிறது. சோசலிசத்தைப் பற்றிய வரலாற்று புரிதல் குறைவாக இருப்பினும், பல இளைஞர்கள் அடையாளங்களைத் தேடுகிறார்கள், தங்களுக்கு வழிகாட்ட சிறந்த மாதிரிகள் அவர்களுக்குத் தேவைப்படுகி ன்றன.”

தெருவில் சராசரியான, மனிதர்களைப் போல் பி.எஸ்.எம். உறுப்பினர்கள் தோற்றமளிப்பது, இளைஞர்களை மிகவும் கவர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

” டாக்டர் நசீர் ஹசிம்-ஐ (பி.எஸ்.எம். தலைவர்) பாருங்கள், அவர் சாதாரண வாழ்க்கை வாழும் ஓர் எளிய மனிதர், ஆனால் மிகவும் அறிவார்ந்தவர்.

பி.என். அல்லது பக்காத்தான் போல, பல ஆதரவாளர்கள் இல்லை என்றாலும், நாசீர் சொந்த பாணியையும்  சொந்த நிலைப்பாட்டையும் கொண்டிருக்கிறார். இளைஞர்கள் இதனை விரும்புகிறார்கள்,” என்று அவர் மேலும் சொன்னார்.