வங்கதேசம்: பாலியல் தொழிலில் தள்ளப்படும் ரோஹிஞ்சா பெண் அகதிகள்

கடந்த ஆகஸ்ட் முதல் மியான்மரின் ராகைனில் இருந்து தப்பிச் சென்ற லட்சக் கணக்கான ரோஹிஞ்சா அகதிகள், வங்கதேசத்தில் அபாய நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மியான்மரிலிருந்து தப்பி வந்த தன்னை, அழகுபடுத்தி, பின்பு கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் செய்ய வைத்தது குறித்து பிபிசியின் நோமியா இக்பாலிடம் கூறினார், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

இளஞ்சிவப்பு நிறத் துண்டால் தன் முகத்தை மறைத்திருந்த அந்த 21 வயது பெண் ஹலீமா, யாரும் இல்லாத ஒரு தனி இடத்தில் என்னை பார்த்து பேச ஒப்புக் கொண்டார்.

“வங்கதேசத்தில் நுழைந்த உடன், நாங்கள் ஒரு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு ஒரு உள்ளூர் மனிதர் எங்களுக்கு உணவு வழங்கினார்.” மேலும் அந்த பெண் கூறுகையில், “அவர் என்னிடம் வந்து தன் மனைவியை இழந்துவிட்டதாகவும் தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுவதாகவும்” கூறினார்.

அதை நம்பி காக்ஸ் பசார் என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு தாம் அழைத்துச் செல்லப்பட்டதாக ஹலீமா தெரிவித்தார்.

அந்த வீட்டிற்கு சென்றவுடன் தன்னைப் போலவே ஏழெட்டு இளம்பெண்கள் அங்கு இருந்ததை பார்த்ததாகக் கூறிய ஹலீமா, தான் பயந்துவிட்டதாகவும் பின்பு அந்த வீட்டில் பல ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

வடக்கு ராகைனில் நடைபெற்ற வன்முறையில் இருந்து தப்பிக்க, மூன்று மாதங்களுக்கு முன் வங்கதேசத்திற்கு வந்தார் ஹலீமா. தன் குடும்பம் எங்குள்ளது என்பது குறித்துத் தெரியாத அவர், தம் அக்கம் பக்கத்தினருடன் இங்கு வந்து சேர்ந்தார்.

பாதிக்கும் மேற்பட்ட ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள், குழந்தைகள் தான் – மியான்மர் ராணுவம் மற்றும் சில உள்ளூர் புத்த தீவிரவாதிகள், இவர்களுக்கு எதிராக நிகழ்த்திய வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து ரோஹிஞ்சாக்கள் தப்பித்து இங்கு வந்தனர்.

இந்நிலையில், வங்கதேசப் பெண் ஒருவர் நடத்தி வந்த ஒரு வீட்டில் தாம் இரண்டு மாதங்கள் தங்கியதாக ஹலீமா தெரிவிக்கிறார்.

“என்னை அலங்காரப்படுத்தி ஒரு பொம்மை போல் வைத்திருந்தனர். சில நேரங்களில் ஒரு இரவில் மட்டும் மூன்றிலிருந்து நான்கு ஆண்கள் வீட்டிற்கு வருவார்கள். மிகவும் கடினமாக இருந்தது. பல நாட்கள் ரத்தப் போக்கால் அவதிப் பட்டேன்” என்று அவர் கூறினார்.

அந்த சமயங்களில் எல்லாம் ஹலீமாவிற்கு எந்தப் பணமும் கொடுக்கப்படவில்லை, மூன்று வேலை சாப்பாடு மட்டும்தான் தரப்பட்டது.

ஒரு மாலை நேரத்தில், ஹலீமாவிற்கு ஆண் ஒருவர் உதவு முன்வந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “என்னிடம் பாலியல் உறவுக் கொள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் வந்தார். ஆனால் என் கதையை கேட்ட பிறகு என்னை சகோதரி என்று அழைத்தார். அன்று இரவு முழுதும் என்னுடன் இருந்த அவர், எதுவும் செய்யாமல் அவரின் கைப்பேசி எண்ணை மட்டும் என்னிடம் அளித்து சென்றார்”.

ஒரு நாள், அந்த வீட்டின் பெண் உரிமையாளரால் கடுமையாக தாக்கப்பட்ட ஹலீமா, 15 நட்களுக்கு காயமடைந்திருந்தாக கூறினார்.

அங்கிருந்து தப்பிச் செல்ல திட்டமிட்ட அவர், ஒரு நாள் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வந்த ஆணிடம் இருந்து கைப்பேசியை வாங்கி, அந்த போலீஸ் அதிகாரியைத் தொடர்பு கொண்டார். நடுஇரவில் வந்த காவல்துறை அதிகாரிகள் என்னையும் மீதம் இருந்த ஆறு பெண்களையும் மீட்டனர்.

வங்கதேசத்தில் வேறு எந்த இடமும் தெரியாததால் காக்ஸ் பசாரிலேயே தங்கினார் ஹலீமா.

தன்னிடம் பணம் இல்லாத காரணத்தினால், மீண்டும் பாலியல் தொழில் செய்யும் சூழலுக்கு அவர் தள்ளப்பட்டார்.

பாலியல் தொழில் செய்யும் வேறொரு பெண்ணுடன் தங்கி வருவதாகவும், அவ்வப்போது அங்கு அவருக்கு உணவு வழங்கப்படுவதாகவும் ஹலீமா கூறுகிறார்.

பாதுகாப்பிற்காக இந்த இளம் வயதில் எல்லைகளைத் தான்டி வந்த ஹலீமா எதிர்பார்த்தது இது போன்ற வாழ்க்கையை அல்ல.

“ஐந்து முறை தொழுது, குடும்பத்துடன் உணவு உண்ணக் கூடிய வாழ்க்கை எனக்கு மீண்டும் வேண்டும். மியான்மரில் நான் வாழ்ந்த வாழ்க்கையை நான் மீண்டும் வாழ வேண்டும்”, என்கிறார் ஹலீமா.

இந்நிலையில், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு, தங்களால் முடிந்தததை, உதவி நிறுவனங்கள் செய்து வருவதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இந்த பிரச்சனைகளை சமாளிக்க, காணாமல் போன குழந்தைகளைப் பற்றியத் தகவல்களை முகாம்களில் அறிவிக்க நிதியுதவி அளித்தல் போன்ற சில குறிப்பிடத்தக்க விஷயங்களில் கவனம் செலுத்தி வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

இரண்டு அபாயங்கள் குறித்து தனக்கு கவலையாக உள்ளதென அகதிகளுக்கான ஐ.நாவின் உயர் ஆணையர் ஃபிலிப்போ க்ரான்டி தெரிவித்துள்ளார்.

“ஏதும் இல்லாமல் இங்கு வருவதால் பலர் பாலியல் தொழிலுக்கு சென்று பாதிப்படையும் அபாயம் உள்ளது ஒன்று. மற்றொன்று, மக்கள் தங்களுக்குள் சுமந்திருக்கும் அதிர்ச்சி” என்கின்றார் பிலிஃப்போ கிராண்டி .

இந்த பிரச்சனையின் ஆழம் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. -BBC_Tamil