வேலைக்கு 2,002 நாள்கள், மட்டம் போட்ட அரசு ஊழியர்களே பணி நீக்கம் செய்யப்படுவர்

கடந்த 7 வருடங்களாக, கல்வி அமைச்சினால் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுக்க சிக்கல்களில், ஆக முகான்மையானது வேலைக்கு மட்டம் போடுதல் ஆகும்.

2010 முதல் இவ்வாண்டு அக்டோபர் வரை, அமைச்சகத்தால் கையாளப்பட்ட பல்வேறு பிரிவுகளிலான 3,450 வழக்குகளில், 1,912 வழக்குகள் (55.4%), வேலைக்கு மட்டம் போடுதல், என்று பெர்னாமா வெளியிட்ட செய்தியினைக் கல்வி அமைச்சர் மஹ்ட்சீர் காலிட் மேற்கோள் காட்டினார்.

இவற்றில், 1,311 வழக்குகள் (68.57%) செயற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் செய்த குற்றங்கள், 601 வழக்குகள் (31.43%) மேலாண்மை மற்றும் நிபுணத்துவ அல்லது தொழிற்முறை குழுக்களை உள்ளடங்கிய குற்றங்கள் என அவர் தெரிவித்தார்.

உள்புறப் பகுதியில், 2,002 நாட்கள் அல்லது 5 ஆண்டுகளுக்கு வேலை செய்யாததற்காக, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இது தொலைதூரத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த கதை. 2,000 நாள்களுக்கு வேலைக்குப் போகாததற்கு உண்மையில் என்ன காரணம் என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்று நேற்று, புத்ராஜெயாவில் ‘கல்வி அமைச்சின் நேர்மை நாள்’ தினத்தை அதிகாரப்பூர்வமாக திறந்துவைத்து பேசுகையில் அவர் தெரிவித்தார்.

“பள்ளியின் தலைமையாசிரியர் பல வருடங்கள் அவரைச் சமாதானப்படுத்தி உள்ளார், பிரச்சனை என்னவென்று நமக்குத் தெரியவில்லை. நான்  அது ஓர் ஆசிரியர் என்று கூறவில்லை ….. ஒருவேளை ஓர் அலுவலராகவோ அல்லது ஆய்வக உதவியாளராகவோ கூட இருக்கலாம்.

குடும்பப் பிரச்சனை, கடன் சுமை மற்றும் அன்றாட பணிகள், வேலைக்கு மட்டம் போடுவதற்குக் காரணங்களாக கூறப்படுகின்றன என்று மஹ்ட்சிர் கூறினார்.

இதுபோன்ற சிக்கல்களை எதிர்நோக்கும் ஊழியர்கள், அந்தந்தத் துறைகளில் இருக்கும் ஆலோசனை பிரிவை நாடுவது நல்லது என்று அவர் அறிவுறுத்தினார்.

அரசு ஊழியர்கள் மத்தியில் ‘நேர்மை’ கூறுகள் வெறும் ஊழல், மோசடி அல்லது அதிகாரத் துஷ்பிரயோகம் என்பனவற்றில் மட்டும் கவனம் கொள்வது அல்ல; மாறாக, அலட்சியப் போக்கு, நிர்வாகத்தின் பலவீனங்கள், நிதி மேலாண்மை மற்றும் வேலைக்கு மட்டம் போடுதல் அல்லது முறையாக வேலையைச் செய்யாமல் இருத்தல் போன்ற ஒழுக்க மீறல் பிரச்சினைகளும் அதில் அடங்கும் என்று அவர் விளக்கப்படுத்தினார்.

வேலைக்கு மட்டம் போடுதலை, இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. அதனை முறையாக விசாரித்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வேலைக்கு மட்டம் போடுதலுக்கு அடுத்த நிலையில், கல்வி அமைச்சால் பதிவு செய்யப்பட்ட குற்றம், 227 நிதி நடைமுறை தொடர்பான வழக்குகள் ஆகும். அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் துஷ்பிரயோகம் (205 வழக்குகள்), குற்றவியல் குற்றங்கள் (181 வழக்குகள்), ஒழுக்க மீறல்கள் (158 வழக்குகள்) மற்றும் பாலியல் துன்புறுத்தல் (120 வழக்குகள்) ஆகியனவும் கல்வி அமைச்சின் பதிவில் உள்ளவை ஆகும்.

“தண்டனையைப் பொறுத்தவரையில், 1,996 தண்டனைகள் ஒழுங்குமுறை குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்டன. அவற்றுள் மொத்தம் 947 வழக்குகள் பணி நீக்கம் செய்யப்பட்டவை, 270-க்கும் மேற்பட்ட வழக்குகள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டவை, 227 வழக்குகளில் குற்றவாளிகளின் ஊதியம் குறைக்கப்பட்டது, 107 வழக்குகளில் ஊதிய உயர்வு தாமதிக்கப்பட்டது, 79 வழக்குகளுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன,   58 வழக்குகளில் ஊதிய உரிமை பறிக்கப்பட்டது மற்றும் 36 வழக்குகளில் அவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன,” என்று கல்வி அமைச்சருமான மாஹ்ட்சிர் காலிட் தெரிவித்தார்