டாக்டர் எம் : அது ரஃபிசியின்  யோசனை, சொத்து அறிவிக்க ஹராப்பான் முடிவு செய்யவில்லை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனது சொத்துக்களை அறிவிக்கத் தயாராக இருப்பதாக துன் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்தார்.

“ஆமாம், நான் என் சொத்துக்களை அறிவிக்க முடியும், ஆனால் நான் வேட்பாளரா அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரியாது,” என்று இன்று, நாடாளுமன்றத்தில் நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவரான அவர் தெரிவித்தார்.

பிகேஆர் உதவித் தலைவரான ரஃபிஸி ரம்லி ஓர் அறிக்கையில், அக்கூட்டணியைச் சேர்ந்த 30 வேட்பாளர்கள், வரும் ஞாயிறன்று தங்கள் சொத்துக்களைப் பொதுவில் அறிவிப்பார்கள் என்றும்; தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கட்சி தாவினால் RM 20 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும் என்று அவர்களைக் கட்டுப்படுத்தலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால், சொத்து அறிவிப்பு பற்றி பக்காத்தான் ஹராப்பான் கலந்துரையாடவில்லை என்று டாக்டர் மகாதிர் கூறினார்.

“அது இன்வோக் பற்றியது,” என்று ரஃபிஸி தலைமையிலான ஓர் இயக்கத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

“அவர் ஓர் அறிவிப்பு செய்தார். எங்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. எங்களுக்குச் சொந்த உத்திகள் உள்ளன, நாங்கள் தலைமை கவுன்சிலில் கலந்துபேசி, இறுதி முடிவைப் பின்பற்றுவோம்,” என்றார் மகாதீர்.