37 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த முகாபே வீட்டுக்காவலில்

ஜிம்பாப்வேவின் அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980 முதல் அந்நாட்டு அதிபராக இருந்த ராபர்ட் முகாபே பாதுகாப்பாக உள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.

” சமூக மற்றும் பொருளாதார துன்பங்களை” உருவாக்கிய முகாபேவுக்கு நெருக்கமானவர்களை தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய பிறகு ராணுவ செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.

தொலைக்காட்சியில் தோன்றி அறிக்கை ஒன்றினை வாசித்த மேஜர் ஜெனரல், இது ஆட்சிக்கவிழ்ப்பு இல்லை என கூறினார். மேலும், முகாபே பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார். இச்சம்பவம் ஜிம்பாப்வேவின் தலைநகரான ஹராரேவில் நடந்துள்ளது.

நகரின் வடக்கு புறநகர் பகுதியில், பயங்கர துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கிகளின் சத்தங்களும் கேட்டுள்ளன.

இது குறித்து 93 வயதான அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபேவிடம் இருந்து இதுவரை எந்த வார்த்தையும் வரவில்லை.

அரசு தொலைக்காட்சி நிறுவனமான இசட்.பி.சியின் தலைமை அலுவலகத்தைக் ராணுவத்தினர் முதலில் கைப்பற்றியுள்ளனர்.

ராணுவ புரட்சி எனக் கூறப்படுவதை மறுக்கும் தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே தூதர் ஐசக் மோயோ, அரசு ‘நிலையாக’ உள்ளது என கூறியுள்ளார்.

ராணுவத் தலையீட்டுக்கான சாத்தியங்கள் இருப்பதாக அந்நாட்டு ராணுவ தலைவர் எச்சரிக்கை விடுத்தபிறகு, ஜிம்பாப்வேவின் ஆளுங்கட்சி ராணுவ தலைவர் மீது ‘துரோக’ குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பிறகு இங்கு நிலைமை மோசமானது.

நாட்டின் துணை அதிபரை அதிபர் ராபர்ட் முகாபே நீக்கியபிறகு, ராணுவத் தலைவர் சிவென்கா, அதிபருக்குச் சவால் விடுத்தார்.

அதிபர் ராபர்ட் முகாபேவின் ‘ஜானு பிஃப்’ கட்சியில் இருப்பவர்கள் களையெடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த ராணுவம் செயல்பட தயாராக உள்ளது என சிவென்கா கூறியிருந்தார்.

செவ்வாய்க்கிழமையன்று ஆயுதம் தாங்கிய வாகனங்கள் ஹராரேவின் புறநகர் சாலைகளில் நிலைகொண்டதால், பதற்றங்கள் மேலும் அதிகரித்தது.

செவ்வாய்க்கிழமை மாலை ஹராரேவில் உள்ள இசட்.பி.சி அலுவலகத்தை ராணுவ வீரர்கள் கைப்பற்றியபோது, சில ஊழியர்கள் ராணுவ வீரர்களால் இழுத்துத் தள்ளப்பட்டனர் என தகவல்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.

ஊழியர்கள் ” கவலைப்பட வேண்டாம்” என்றும், அலுவலகத்தைப் பாதுகாக்கவே தாங்கள் வந்துள்ளதாகவும் ராணுவ வீரர்கள் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது நீக்கப்பட்டுள்ள துணை அதிபர் மனன்காக்வே, நாட்டின் அடுத்த அதிபராவார் என முன்பு பார்க்கப்பட்டது. ஆனால், அதிபர் ராபர்ட் முகாபேவின் மனைவி கிரேஸ் முகாபேதான், அடுத்த அதிபருக்கான போட்டியில் முதலிடத்தில் இருக்கிறார் எனது தற்போது தெளிவாகியுள்ளது.

மனன்காக்வே மற்றும் கிரேஸ் முகாபே இடையிலான சண்டை ஜானு பிஃப் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

மனன்காக்வேவிற்கு ஆதரவளிக்காதவர்களுக்கு அவரின் கூட்டாளிகள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகக் கடந்த மாதம் கூறிய கிரேஸ் முகாபே, ராணுவ புரட்சிக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதற்கிடையில் அமெரிக்கா தனது தூதரகத்தை மூடி உள்ளது. இதுகுறித்து ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் இயங்கும் அமெரிக்க தூதரகம் ட்விட்டரில், “ஜிம்பாப்வேவில் நிச்சயமற்றதன்மை நிலவுகிறது. இதன் காரணமாக, ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு நவம்பர் 15-ம் தேதி மூடுகிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

முகாபேவின் நிலை:

இன்று அதிகாலை ஹராரேயின் வடக்கு புறநகர் பகுதியில் துப்பாக்கி ஒலிக்கும் சத்தம் கேட்டது. இந்த பகுதியில்தான் அதிபர் முகாபே மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள் வசிக்கிறார்கள் என்று ஹராரேவிலிருந்து பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.

தென் ஆஃப்பிரிக்காவின் அதிபர் ஜுமாவின் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அதிபர் ஜுமா இன்று அதிகாலை அதிபர் ராபர்ட் முகாபேவிடம் பேசினார். முகாபே தான் காவலில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், அதே நேரம் தாம் நலமாக இருப்பதாகவும் ஜூமாவிடன் கூறினார்.”

தென் ஆஃப்பிரிக்கா வளர்ச்சி குழுவிலிருந்து சிறப்பு தூதர்கள் ஜிம்பாப்வேவிற்கு அனுப்பப்படுவார்கள் என்று ஜுமா தெரிவித்தார்.

நியாயப்படுத்தும் ராணுவம்:

“அதிபரை சுற்றி இருப்பவர்கள்தான் எங்கள் குறி. அவர்கள் தான் தவறுகள் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளால் சமூகமும், பொருளாதாரமும் சீரழிந்துக் கொண்டிருக்கிறது.” என்று தொலைக்காட்சியில் தோன்றி தெரிவித்தார் ராணுவ அதிகாரி மஜ் ஜென் மோயோ.

மேலும் அவர், “எங்கள் குறிக்கோள்கள் நிறைவடைந்ததும், நாட்டின் நிலை இயல்புநிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

நாட்டின் நன்மைக்காக பாதுகாப்பு படை எங்களுடன் இணைய வேண்டும் என்று அழைப்புவிடுத்த மோயோ, ராணுவத்தை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கினால், அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

இந்த ராணுவ நடவடிக்கையை தலைமை தாங்குவது யார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

கடந்த வாரம் சீனா சென்றுவந்த ராணுவ தலைவர் ஜின் கான்ஸ்டாண்டினோ, திங்கட்கிழமை ,”ஆளும் கட்சியான ஜிம்பாப்வே ஆஃப்ரிக்கன் நேஷனல் யூனியன் – பாட்ரியாடிக் ஃப்ரண்ட் கட்சியில் தேவையான களையெடுப்புகளை செய்ய ராணுவம் தன்னை தயார் செய்துக் கொண்டிருக்கிறது.” என்றிருந்தார்.

மக்கள் இதனை எப்படி பார்க்கிறார்கள்?

ஹராரேவில் சிலர் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். “எங்களுக்கு நல்வாழ்வு கிடைக்கப்போகிறது. நாங்கள் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.” என்று பிபிசியிடம் ஒரு பெண் கூறினார்.

“குடிமக்களை வறுத்துபவரை ஆட்சியிலிருந்து நீக்கியதற்காக நான் ராணுவ அதிகாரிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் நாட்டை அவர் குடும்பத்தின் சொத்து போல நினைத்து ஆட்சி செய்கிறார்” என்றார் ஒருவர்.

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் தூதரகங்கள் தம் நாட்டு மக்களை பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்கச் சொல்லி வலியுறுத்தி உள்ளன.

ஜிம்பாப்வேவின் நெருங்கிய வணிக கூட்டாளியான சீனா, “நிலைமையை கவனித்துக் கொண்டிருக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் உள்நாட்டு பிரச்சனையை சரியாக கையாள்வார்கள் என்று நம்புகிறோம்.” என்று கூறியுள்ளது. -BBC_Tamil