ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு … விசாரணைக்கு உத்தரவிட்டது இந்திய கடலோர காவல் படை

ராமேஸ்வரம்: இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடிக்க வலைகளை விரித்து கொண்டிருந்தனர். அப்போது மீனவர்களின் படகுகளை நோக்கி இந்தியக் கடலோர காவல் படையினர் சென்றுள்ளனர். இதையடுத்து அச்சமடைந்த மீனவர்கள் வலைகளைப் போட்டுவிட்டு அவசரமாக கரைக்கு திரும்ப முயற்சித்தனர். அப்படி திரும்ப முயன்ற மீனவர்கள் மீது கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்திய கடலோர காவல் படையினரே

இதில் ஜான்சன், பிச்சை ஆகிய மீனவர்கள் காயமடைந்தனர். பொதுவாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர்தான் தாக்குதல் நடத்துவது, துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவர். ஆனால் தமிழக மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினரே துப்பாக்கிச் சூடு நடத்தியதால் தமிழகமே கொந்தளித்தது.

இந்தியில் பேசவில்லை

இந்நிலையில் அந்த மீனவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசவில்லை என்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டை இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் மறுத்தனர்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

இந்நிலையில் இந்திய கடலோர காவல் படையின் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்திருந்தனர். இதனிடையே இன்று மண்டபம் முகாமில் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மீனவ அமைப்பினருடன் இந்திய கடலோர காவல் படையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவு

அப்ப்போது, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

நாளை வேலைநிறுத்தம்

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளின் விசாரணையை ஏற்க முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரியை உடனடியாக கைது செய்ய வேண்டும். திட்டமிட்டபடி நாளை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தனர்.

tamil.oneindia.com

TAGS: