நஜிப் : ஹராப்பான் இளைஞர்களுக்கு 1எம்டிபி – ஐபிஐசி-யில் எந்தத் தலையீட்டு உரிமையும் இல்லை

1எம்டிபி – சர்வதேசப் பெட்ரோலியம் முதலீட்டு நிறுவனம் (ஐபிஐசி) ஆகியவற்றிற்கு இடையேயான மத்தியஸ்த தீர்வு நடவடிக்கை தொடர்பில், நஜிப், 1எம்டிபி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக, பக்காத்தான் ஹராப்பானின் 10 தலைவர்கள் முன்னெடுத்திருக்கும் சட்ட நடவடிக்கையில், அவர்களின் தலையீட்டு உரிமை குறித்து, நஜிப் இன்று கேள்வி எழுப்பினார்.

மனுதாரர், இலண்டனில் நடந்த வழக்கில் மத்தியஸ்தர் அல்ல என்று நஜிப் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் முகமட் ஹஃபாரிஷாம் ஹருண் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

“அவர்கள் மத்தியஸ்தர்கள் தரப்பில் இல்லை, எனவே அவர்கள் இதில் பாதிக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

இலண்டனில் நடத்தப்பட்ட சர்வதேச மத்தியஸ்தம் பற்றி, விசாரிப்பது நம் நாட்டின் உயர்நீதிமன்ற எல்லைக்கு உட்பட்டதா என்பது பற்றியும்  நஜிப் விவாதித்ததாக ஹஃபாரிஷாம் தெரிவித்தார்.

வழக்குரைஞர் முகமட் ஹஃபாரிஷாம் ஹருண்

“மலேசிய நீதிமன்றங்கள்  இந்த வழக்கை செவிமடுக்க எந்த அதிகாரமும் கொண்டிருக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

ஐ.பி.ஐ.சி மற்றும் ஆபார் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பி.ஜே.எஸ். லிமிடெட் ஆகியவற்றிற்கு இடையேயான ஒப்பந்தத்தில், பிரதமர் நஜிப்புக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை. எனவே, மனுதாரர்கள் தவறான முறையில் நஜிப்பின் பெயரை அதில் குறிப்பிட்டுள்ளதாகவும், அம்னோ தொடர்புடைய அவ்வழக்குரைஞர் கூறினார்.

‘நஜிப்பை நிராகரிக்கும் இளைஞர் இயக்கம்’ (GANT1) எனத் தங்களை அறிமுகம் செய்துகொள்ளும் ஓர் இளைஞர் குழுவினரால், கடந்த ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவ்வழக்கைத் தள்ளுபடி செய்யமாறு நஜிப் கோரிக்கை விடுத்துள்ளார்.

நஜிப் தவிர, 1 எம்டிபி மற்றும் அரசாங்கமும் அக்கோரிக்கைகளை இரத்து செய்ய விண்ணப்பித்துள்ளன.

1எம்டிபி சார்பில் வழக்கறிஞர் ஹனிஃப் காத்ரி அப்துல்லா, கண்தி1 சார்பில் தான் ஹோக் சுவான், அரசாங்கத்தின் சார்பில் ஆலிஸ் லோக் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராயினர்.

நீதிபதி ஹூ சியு கேங், விண்ணப்பத்தின் முடிவை டிசம்பர் 11- ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.