வங்கி அனுமதியின்றி, காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு அபராதம், சிறை தண்டனை

வங்கியின் ஒப்புதல் இன்றி, மூன்றாம் தரப்பினருக்குக் கார்களைக் குத்தகைக்கு விடும் உரிமையாளர்கள் மீது, அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று உள்துறை அமைச்சர் ஷாஹிட் ஹமிடி கூறினார்.

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, மூன்றாம் நபருக்கு வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பது, ‘வாடகை கொள்முதல் சட்டம் 1967’-ஐ மீறுவதும் ஆகும் என ஷாஹிட் ஹமிடி கூறினார்.

“வங்கிக் கடனைத் தொடர்ந்து செலுத்துதல், கார்களைக் குத்தகைக்குக் கொடுத்தல் போன்றவை,  உண்மையில் உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சின் அதிகாரத்தின் கீழ், வாடகை கொள்முதல் சட்டக் கோட்பாடுகளை மீறுவது ஆகும்,” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்தார்.

வங்கிக் கடனைத் தொடர்ந்து செலுத்தும் திட்டங்களில் ஏற்படும் மோசடிகளை விளக்குமாறு லிம் லிப் எங் (டிஏபி-சிகாம்புட்) கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

வங்கிக் கடன் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்போது, ஓர் உரிமையாளர் காரை விற்பனை செய்வது, ‘உரிமையாளர் கொள்முதல் சட்டம் 1967’, செக்‌ஷன் 3-ன் கீழ், ரிம30,000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைவாசம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

மாதந்தோறும், வங்கி தவணை பணத்தைச் செலுத்த முடியாத உரிமையாளர்கள், இதுபோன்று செய்யும் சம்பவங்களை உள்துறை அமைச்சு அறிந்திருக்கிறது.

“பிரச்சனை என்னவென்றால், காரை எடுத்தவர் வங்கிக் கடனை மாதா மாதம் செலுத்தாமல் போனால், கார் உரிமையாளர் கருப்புப் பட்டியலிடப்படுவார்.

“இந்த வழக்குகளைக் ‘கார் திருடப்பட்டது’ என வகைப்படுத்த முடியாது, ஏனெனில், அவர்கள் குற்றவியல் கூறுகளின் 378-வது பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி, திருட்டுத் தன்மைக்கு ஏற்புடையவர்கள் இல்லை.

“எனினும், போலிஸ் விசாரணையில், மோசடி கூறுகள் இருந்தால், குற்றவியல் பிரிவு 420-ன் கீழ், போலீஸ் விசாரணை செய்யும்,” என்று அவர் கூறினார்.