சிறிலங்கா மீதான சித்திரவதைக் குற்றச்சாட்டு – தாமதமின்றி நடவடிக்கை எடுக்கக் கோருகிறது அமெரிக்கா

சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதை மற்றும் பாலியல் வதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கரிசனை கொண்டுள்ளதாகவும், இத்தகைய மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவில் அண்மைக்காலத்தில், தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள் தொடர்பாக, ஏபி வெளியிட்ட ஆய்வு அறிக்கை குறித்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர், ஏபி செய்தி நிறுவனத்திடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

“சிறிலங்கா பாதுகாப்புச் சேவைகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளது.

சித்திரவதைகள், வல்லுறவுகள், பாலியல் வன்முறைகள், உலகில் எங்கு நடந்தாலும், அதனை அமெரிக்கா கண்டிக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விசாரணை செய்யும், சிறிலங்கா அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

இத்தகைய மீறல்களுக்குப் பொறுப்பான அனைவரையும் தாமதமின்றி, பொறுப்புக்கூற வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: