கோலாலம்பூர் மருத்துவமனையில் இருக்கும் அன்வாரை நஜிப் சந்தித்தார்

இன்று, பிரதமர் நஜிப் இரசாக்கும் அவரின் துணைவியார் ரொஸ்மா மன்சோரும், கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அன்வார் இப்ராஹிமை சந்தித்தனர்.

தனது உத்தியோகபூர்வ ட்விட்டரில், அன்வாரைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம் ஒன்றை நஜிப் பகிர்ந்தார்.

“நான் இன்று கோலாலம்பூர் மருத்துவமனையில்,  அன்வார் இப்ராஹிமைச் சந்தித்தேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும்”, என்று நஜிப் கூறினார்.

அன்வாரின் மனைவியும் பிகேஆர் தலைவருமான வான் அசீசா வான் இப்ராஹிமும் அச்சந்திப்பின் போது உடன் இருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனது தோள் பட்டையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர், அன்வார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அன்வாரின் மகன், முஹம்மட் ஏசான், நலம் விசாரிக்க வந்த நஜிப் மற்றும் ரோஸ்மாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அதே போல், அவரது தந்தைக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனை  ஊழியர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

“எங்கள் தந்தை, சிறைக்கு வெளியே சிகிச்சைப் பெற, அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்று நான் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.

அன்வாருக்குச் சிகிச்சையளித்த மருத்துவக் குழுவினரின் ஆலோசனை அது என்றும் அவர் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பரில், அன்வாரின் உடல்நிலை மோசமாகி வருவதாக, அவரின் குடும்பம் புகார் செய்யத் தொடங்கியது.

இவ்வாண்டு செப்டம்பர் 22-ம் தேதி, மருத்துவமனையிலிருந்து சிறைக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்து ஒன்றினால், அன்வாரின் நிலை மேலும் மோசமடைந்தது.