இந்தியாவின் முதலீட்டு தர மதிப்பீட்டை உயர்த்தியது மூடிஸ் நிறுவனம்

சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ், கடத்த 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவின் இறையாண்மை பத்திரத் தரமதிப்பீட்டை அதிகரித்துள்ளது.

கடந்த ஓராண்டில் இந்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கோள் காட்டியுள்ள இந்நிறுவனம், நீண்ட கால அடிப்படையில் அவை பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும் என்றும் கூறியுள்ளது.

நிலையானது என்பதைக் குறிக்கும் ‘BAA3’ எனும் மதிப்பீட்டில் இருந்து இந்தியாவை, நேர்மைறையானது என்று குறிக்கும் ‘BAA2’ என்று தரம் உயர்த்தியுள்ளது. முதலீட்டுக்கான இரண்டாவது குறைவான தர மதிப்பீட்டிலிருந்து இந்தியா உயர்ந்து தற்போது, இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் நிலைக்கு நிகராக உள்ளது.

இதனால் இந்தியா வெளிநாடுகளில் கடன் வாங்குவதற்கான செலவுகள் குறையும் என்றும், இது இந்திய அரசு மற்றும் நிறுவனங்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த புதிய மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது, கடந்த ஓராண்டில் நிறைய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அவரது அரசுக்கு பெரும் உத்வேகமாக இருக்கும்.

கடந்த வாரம் எளிதாக தொழில் செய்ய வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவை, உலக வங்கி 30 இடங்கள் உயர்த்தியுள்ள நிலையில் மூடிஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜி.எஸ்.டி வரி மற்றும் பணமதிப்பு நீக்கம் ஆகியவற்றை மோசமான முறையில் அமல்படுத்தியதாக அரசை விமர்சித்த எதிர்க் கட்சிகளை தாக்க நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தியுள்ளார்.

“இந்திய அரசின் பொருளாதார வளர்ச்சி குறித்து சந்தேகம் கொண்டிருந்தவர்கள் தங்கள் சிந்தனைகளை தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று,” அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.7%ஆக குறைந்தது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி ஆகியவை அதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

இன்னொரு கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டேண்டர்டு அண்ட் புவர்ஸ் இந்தியாவின் நிதி நிலையை கருத்தில்கொண்டு, கடைசி தரத்துக்கு ஒரு இடம் மேலே மட்டுமே இந்தியாவை, BBB- என்று வைத்துள்ளது.

“இந்தியப் பொருளாதாரத்தை மதிப்பிடுவதற்கு முன், அடுத்த நிதி நிலை அறிக்கை வெளியாக பிற நிறுவனங்கள் காத்திருக்கும்,” என்கிறார் கிரிசில் தர மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சபன்வய்ஸ்.

மீதமுள்ள சவால்கள்

2014-இல் மோதியின் தேர்தல் பிரசாரத்தின்போது அவரின் முக்கிய வாக்குறுதியாக வேலைகளை உருவாக்குவது இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகியும் அதை நிறைவேற்ற முடியாமல் அரசு போராடி வருகிறது.

மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, ஆண்டுக்கு 1.2 கோடி வேலைவாய்ப்புகளை இந்தியா உருவாக்க வேண்டும். அது நடக்காததால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது.

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் இதைக் கூறி மோதியைத் தாக்கினார்.

குஜராத் தேர்தல் மீதான தாக்கம்

இந்த முன்னேற்றம் குஜராத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால், பாரதிய ஜனதாவின் தேர்தல் பிரசாரத்தில் இது ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், பொருளாதார சரிவு மற்றும் ஜி.எஸ்.டி ஆகிய பிரச்சனைகளால் விமர்சிக்கப்பட்ட பிரதமர் மோதிக்கு இது ஒரு கிறிஸ்துமஸ் பரிசாகவே இருக்கும்.

உலக வங்கி, மூடிஸ் ஆகியவற்றால் பொருளாதார மதிப்பீடு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாரதிய ஜனதாவும் மோதியை ‘பொருளாதார மீட்பராக’ காட்டிக்கொள்ளும். -BBC_Tamil

TAGS: