இரகசிய தடுப்பு முகாம்களில் யாரும் இல்லை – கைவிரித்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் தற்போது எந்த இரகசியத் தடுப்பு முகாமும் இல்லை, அவ்வாறான இடங்களில் எவரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கவும் இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதிகளை நேற்று அதிபர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, சிறிலங்கா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சார்பில், வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளை நேற்று சிறிலங்கா அதிபர் சந்தித்தார்.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், தமது கோரிக்கைகளையும், தமது நிலையையும் சிறிலங்கா அதிபருக்கு தெளிவுபடுத்தினர்.

நாட்டின் எல்லா சமூகங்களும் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினை பற்றி தாம் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும், இந்தப் பிரச்சினைக்கு மிகவும் வெளிப்படையானதும் நியாயமானதுமான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடப்பாடு தமக்கும் தமது அரசாங்கத்துக்கும் இருப்பதாகவும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

”அரசாங்கத்தினால் இரகசிய தடுப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அவ்வாறான எந்த இரகசிய தடுப்பு முகாமும் தற்போதைய அரசாங்கத்தில் இல்லை. எவரும் அவ்வாறு தடுத்து வைக்கப்படவுமில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களிக் குடும்பங்களின் பிரச்சினைகளைத் துரிதமாக தீர்த்து வைப்பது தான் எனது இலக்கு.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாவட்டச் செயலகங்கள் ஊடாக படிவங்களை வழங்கி, காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலம் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டுமாறும், டிசெம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் இந்த விபரங்களைத் திரட்டுமாறு மாவட்டச் செயலகங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்புமாறும் இந்தச் சந்திப்பின் போது அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் பணிப்புரை விடுத்தார்.

காணாமல்போனோர் பணியகம் மற்றும் காணாமல்போனோர் ஆணைக்குழு மூலம், இந்த தகவல்களை மீளாய்வு செய்யுமாறும் சிறிலங்கா அதிபர் ஆலோசனை கூறியுள்ளார்.

-puthinappalakai.net

TAGS: