கல்வி அமைச்சு : தலைமையாசிரியர் இடமாற்றம் – சாதாரண நடைமுறை

பட்டர்வொர்த்தில், தமிழ்ப்பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு, முதலமைச்சர் லிம் குவான் எங் வருகையே காரணம் எனும் குற்றச்சாட்டைக் கல்வி அமைச்சு மறுத்தது.

இது ஒரு சாதாரண விஷயம், பினாங்கில் உள்ள தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகளில் இது நடைமுறையில் உள்ளது, என துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்தார்.

அக்டோபர் 2-ம் தேதி, பினாங்கு, ஆயர் ஹீத்தாம், ராஜாஜி தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் பணி ஓய்வு பெற்றதால், 7 தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

ஒரு பள்ளியின் தலைமையாசிரியராக, துணைத் தலைமை ஆசிரியரை நியமனம் செய்வது உட்பட, அப்பரிமாற்றத்தில் உள்ளதாகக் கமலநாதன் தெரிவித்தார்.

“கல்விச் சேவைகளில் உள்ள உள்ளிட மாற்றம், பள்ளிகள் மற்றும் கல்வி ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, பொதுவான செயல்முறை ஆகும்.

“எனவே, மாக் மண்டின் பள்ளித் தலைமையாசிரியர், அரசியல் பிரச்சினைகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதில் உண்மை இல்லை,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

பினாங்கில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் இடமாற்றப் பட்டியலையும் கமலநாதன் வழங்கினார்.

  1. இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி துணைத் தலைமையாசிரியர் மகேஸ்வரி – பத்து காவான் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்
  2. பத்து காவான் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் வனித்தா மணி – மேய் ஃபீல்ட் தமிழ்ப்பள்ளி
  3. மேய் ஃபீல்ட் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சுமதி – அல்மா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்
  4. அல்மா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மேகலை – சங்காட் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்
  5. சங்காட் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரன் – மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்
  6. மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி – பிறை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்
  7. பிறை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஜசிந்தா – இராஜாஜி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்

முன்னதாக, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் II, பி.ராமசாமி, மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர், வி. தமிழ்ச்செல்விக்கு, லிம் அப்பள்ளிக்குச் சென்றுவந்த பின்னர், ஒரு வாரகால இடமாற்ற நோட்டிஸ் கொடுக்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டி இருந்தார். மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் ஓராண்டு தலைமையாசிரியராக இருந்த வி. தமிழ்ச்செல்வி, பிறை தமிழ்ப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

பள்ளியின் மேம்பாட்டுக்காக ரிம100,000 மற்றும் மழலையர் பள்ளிக்கு ரிம10,000 ஆகியவற்றை ஒப்படைக்க லிம் அப்பள்ளிக்குச் சென்றார்.

தேசியப் பள்ளிகளுக்கு லிம் செல்வது மிகவும் அரிது. ஒருமுறை, புக்கிட் மெர்தாஜாம் சீனப்பள்ளியைப் பார்வையிடச் சென்ற அவரை, பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. மேலும், கல்வி அமைச்சரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதமும் அவரிடம் கேட்கப்பட்டது.

ஆனால், பெர்மாத்தாங் பாவோ அம்னோ தலைவர், ஷைடி முகமது ஷைட், அச்சீனப் பள்ளியில் நுழைய அனுமதிக்கப்பட்டார். கல்வி அமைச்சின் அதிகாரிகள், இரு தரநிலைகளைக் கொண்டுள்ளதை லிம் சாடினார்.