தீரன் அதிகாரம் ஒன்று பின்னணியில் உள்ள உண்மைக் கதை!

“தீரன் அதிகாரம் ஒன்று”  படம் “ஆபரேஷன் பவாரியா” என்ற உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் உருவானது. அந்த உண்மைக்கதையும் பின்னணியும் இதோ. 1990களில் இருந்தே சென்னையின் வளர்ச்சி அபரிமிதமாக  இருந்தது. சென்னையின் புறநகர் பகுதியும் வளர்ச்சி பெற்றுக்கொண்டே இருந்தது. அப்போது ஊருக்கு ஒதுக்குப்  புறமாக பலரும் வீடு வாங்க ஆர்வமாக இருந்தனர், வசதி படைத்தவர்கள் அனைவரும் அமைதியான இடம் வேண்டி புறநகர் பகுதியில் வீடுகட்டினர். இப்படியாக புறநகர் பகுதிகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக வீடுகள் இருந்தன. அப்போது அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நிகழத்  தொடங்கின. இதில் கொடூரமான கொலைகளும் நிகழ்ந்தன. தமிழ்நாட்டில் அதுவரை கொள்ளை சம்பவங்கள் நடந்திருந்தாலும், அவை கொலை வரை செல்வது அரிது. அதனால் தொடர் கொலைகள் நடக்கத் தொடங்கிய போது சற்று அதிர்ந்தது தமிழகம். பொதுமக்களில் தொடங்கி,   காங்கிரஸைச்  சேர்ந்த நடராஜன், தி.மு.க.வைச்  சேர்ந்த கஜேந்திரன், இப்படியாக கிட்டத்தட்ட 170க்கும் மேலான சம்பவங்கள் நிகழ்ந்தன. 2005ல் அதிமுக முன்னாள் அமைச்சரும் அப்போதைய சட்டமன்ற உறுப்பினருமான  சுதர்சனமும் அந்த வரிசையில் கொல்லப்பட்ட போது தான் தீவிரம் உணர்ந்தது அரசு.

இவையனைத்தும் நெடுஞ்சாலையை ஒட்டிய  புறநகர் பகுதியில், இரவில்  நடைபெற்றதால்,  இதைப்பற்றி எவ்வித துப்பும் கிடைக்காமல் காவல்துறையும் கஷ்டப்பட்டது. அப்போது சென்னை வடக்கு மண்டலத்தின் காவல்துறை ஆணையராக இருந்த ஜாங்கிட் ஒரு தனிப்படையை அமைத்தார். எவ்வித துப்பும் கிடைக்காத நேரத்தில், அனைவரும் இரவு 2.45 மணியளவில்தான் திருடத்  தொடங்குகிறார்கள். அவர்கள் அனைவரும் துப்பாக்கியை பயன்படுத்துபவர்கள், ஹிந்தி பேசுபவர்கள், அந்த 170 சம்பவங்களில் கிட்டத்தட்ட நூறு சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் ஆறு பேரின் கைரேகை ஒரேமாதியாக இருந்தது. இதுபோன்ற  சில தகவல்கள் மட்டுமே கிடைத்தது. இதையே அடிப்படையாக வைத்து தேட தொடங்கினர்.

தனஜெயந்த் என்ற கைரேகை நிபுணரின் தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு இந்தியாவில் இருக்கும் பெரிய  சிறைகளில் உள்ள குற்றவாளிகளின் கைரேகைகளுடன் இந்த கைரேகைகள் ஒத்துப்போகிறதா என பார்த்தனர். கிட்டத்தட்ட இரண்டு, மூன்று வருட தேடலிற்கு  பின்பு ஆக்ராவில் உள்ள சிறையில் இருந்த ஒருவரின் கைரேகை மட்டும் இந்த கைரேகைகளுடன் ஒத்துப்போனது. சிறையில் இருக்கும்போது அவனை விசாரித்தால் மற்றவர்கள் மறைந்து கொள்ளக் கூடுமென்பதால், வெளியில் வந்த பின் அவனை மற்றொரு சிறப்புக்  குழு பின் தொடர்கிறது.

அந்த கண்காணிப்பில் அவனைப்  பற்றியும், இந்த கொலைகளுக்கெல்லாம்  ராஜஸ்தானை சேர்ந்த ‘பவாரியா’ என்ற கொள்ளை கும்பல்தான் காரணம் என்பதையும் கண்டுபிடிக்கின்றனர். ‘பவாரியா’ என்பது பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம்  ஆகிய மாநிலங்களில்  வாழும் பழங்குடி இனமாகும். இந்த இனம், ஆங்கிலேய அரசின் குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டதாகும். ஒரு மாநில காவல்துறை  அதிகாரிகள் அடுத்த மாநிலத்திற்கு சென்று தங்கள்  துப்பாக்கியை பயன்படுத்த இயலாது. அதனால் அந்த மாநில துப்பாக்கியை பெற்றுச்  சென்றனர். இருவரைக்  கொன்று இருவரை உயிருடன் பிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தனர். இதுதான் ஆப்பரேஷன்  பவாரியா. கிட்டத்தட்ட 50 பேர்கள் கொண்ட ஐந்து குழுக்களின் முயற்சி இதில் அடங்கியுள்ளது. அவர்களில் முக்கியமானவர்கள்  தற்போது விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள ஜெயக்குமார், நாஞ்சில் குமரன் (முன்னாள் சென்னை காவல்துறை தலைமை இயக்குனர்) ஆகியோரும் அடங்குவர்.

-nakkheeran.in