ஹோட்டல் ஶ்ரீ மலேசியா : நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் என்ற அச்சத்தால், அஸ்மின் நிகழ்ச்சியை இரத்து செய்தோம்

சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி கலந்துகொள்ளவிருந்த கூட்ட நிகழ்ச்சியைத் திடீரென இரத்து செய்ததற்கான காரணத்தை, ஹோட்டல் ஶ்ரீ மலேசியாவின் வாரியத் தலைவர், அசிஸ் ஷேக் ஃபாட்ஷீர் விளக்கப்படுத்தினார்.

அரசியல் நிகழ்ச்சிகளை நடத்தினால், அத்தங்கும் விடுதியின் நற்பெயருக்குக் கலங்கம் ஏற்படும் என்ற அச்சத்தினாலேயே, ஈப்போ ஹோட்டல் ஶ்ரீ மலேசியாவில், நேற்று நடக்கவிருந்த அக்கூட்டத்தை இரத்து செய்ததாக அவர் கூறினார்.

இருப்பினும், இயக்குநர் வாரியத்தின் தலையீடு இல்லாமல், தங்கும்விடுதியின் நிர்வாகத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை அசிஸ் வலியுறுத்தினார்.

“ஈப்போ, ஹோட்டல் ஶ்ரீ மலேசியா நிர்வாகம் , அஸ்மின் அலி அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார் என்பதை இறுதியிலேயேக் கண்டறிந்தது. பிகேஆரின் துணைத் தலைவர் கலந்துகொள்வதால், அது அரசியல் பிரச்சார நிகழ்ச்சியாகக் கருதப்படும். அதனாலேயே, அந்நிகழ்ச்சிகான அனுமதியை அவர்கள் இரத்து செய்துள்ளனர். அரசியல் பேச்சால் அவ்விடுதி சர்ச்சைக்குரியதாகி, அதன் நற்பெயரை சேதப்படுத்திவிடும் என்று அவர்கள் அச்சப்பட்டுள்ளனர்.

“இருப்பினும், விடுதியின் நிர்வாகத்தினருக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிந்துணர்வுக்காக நான் வருந்துகிறேன், ஈப்போ ஹோட்டல் ஶ்ரீ மலேசியா சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

நேற்று, இறுதி நேரத்தில், விடுதி நிர்வாகம் இட அனுமதியை இரத்து செய்ததால், பேராக் மாநில பிகேஆர் கட்சி கூட்டம், மாநில தலைமையகத்தில் நடந்தது. இதனை தாம் கடுமையாகக் கருதுவதாகவும்; அதற்கு முறையான விளக்கத்தைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் கொடுக்க வேண்டும் என்றும் அஸ்மின் அலி வலியுறுத்தி இருந்தார்.

“இயக்குநர் வாரியம், விடுதியின் நிர்வாகத்தில் தலையிடுவது இல்லை என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். மேலும், இச்சம்பவத்தில் அரசியல் தலையீடுகள் எதுவும் இல்லை என்பதையும் உறுதியாகக் கூறுகிறேன்,” என்று அசிஸ் தெரிவித்தார்.

விடுதியின் விதிமுறைகளை மீறாத வரை, பிகேஆர் உட்பட யார் வேண்டுமானலும் அங்கு நிகழ்ச்சிகளை நடத்த விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார்.