காஷ்மீரில் முதல் தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் அறிவிப்பு; பாதுகாப்பு படை சொல்வது என்ன?

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜக்குரா ஹஸ்ரத்பால் பகுதியில் நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் மற்றும் எஸ்பிஓ அதிகாரி என 3 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டர் இம்ரான் டாக் வீர மரணம் அடைந்தார். மற்றும் எஸ்பிஓ அதிகாரி படுகாயம் அடைந்தார். பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடி தாக்குதலில் பயங்கரவாதி முகீஸ் அகமது அலி கொல்லப்பட்டான். மற்றொருவன் கைது செய்யப்பட்டான். கொல்லப்பட்ட பயங்கரவாதி முகீஸ் அகமது அலி அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.

மற்றொரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டான், இதனையடுத்து அப்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படை தீவிர சோதனையில் ஈடுபட்டது.

இந்நிலையில் ஜக்குராவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதல் முறையாக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் செய்தி பத்திரிக்கையில் பொறுப்பு ஏற்று தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகள் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே காஷ்மீரில் 6 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள், ஐ.எஸ். பொறுப்பு ஏற்றது தொடர்பாக பேசினர். அவர்கள், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஈர்ப்பு காணப்படவில்லை என்றார்.

காஷ்மீரில் ஏற்கனவே போராட்டங்கள் நடைபெற்ற போது ஐஎஸ் பயங்கரவாத இயக்க கொடிகள் மற்றும் ஐ.எஸ். ஆதரவு வாசகங்கள் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-dailythanthi.com

TAGS: