நஜிப் : முன்னாள் போலிஸ் தலைவர் ‘பிராசரானா’வுக்கு ஏற்றவர்

முன்னாள் காவல்துறைத் தலைவர், காலிட் அபு பக்கார், பிராசரானா மலேசிய பெர்ஹாட் குழுவுக்குத் தலைமை தாங்க தகுதியானவர், அவரிடம் அதற்கான அதிகாரம், அனுபவம் மற்றும் பணியை மேற்கொள்ளும் திறன் அனைத்தும் உள்ளதாக பிரதமர் நஜிப் சொன்னார்.

நாடாளுமன்றத்தில், காவல்துறைக்குத் தலைமை தாங்கிய அனுபவம் உள்ளதால் காலிட்டை நியமித்ததாக நஜிப் தெரிவித்தார்.

“1976-ஆம் ஆண்டு முதல், அரச மலேசியக் காவல்படையில், சிறப்பாக சேவையாற்றியதில் இருந்து, அவரின் தலைமைத்துவத் திறமைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

“காலிட்டின் விரிவான, ஆழமான அனுபவம் , பிராசரானா ஏற்படுத்தியிருக்கும் பொது போக்குவரத்து சேவைகளின் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வலுவாக்க உதவும்,” என்று, டாக்டர் சித்தி மரியா மஹ்முட் (அமானா-கோத்தா இராஜா) கேட்ட கேள்விக்கு நஜிப் பதிலளித்தார்.

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த, காலிட்டுக்கு என்ன தகுதி, அனுபவம் உள்ளது என்று பிரதமர் விளக்க வேண்டுமென சித்தி மரியாம் கேட்டிருந்தார்.

செப்டம்பர் 4 –ல், பணிஓய்வு பெற்ற காலிட், அடுத்த நாளே நிதி அமைச்சுக்குச் சொந்தமான அந்நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

‘பிராசரானா’ கோலாலம்பூர், பினாங்கு மற்றும் குவாந்தான் பேருந்து சேவைகள் மற்றும் எம்.ஆர்.டி., எல்.ஆர்.டி மற்றும் மோனோரெயில் போன்றவற்றை உட்படுத்திய, மலேசியாவின் மிகப்பெரிய பொதுப் போக்குவரத்துச் சொத்துகளின் உரிமையாளர் ஆகும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம், தீவிரவாதம் மற்றும் மனிதக் கடத்தல் தொடர்பாக சர்வதேச சமூகத்துடன் உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கான சிறப்புத் தூதராகவும் காலிட் நியமிக்கப்பட்டுள்ளதா நஜிப் அறிவித்தார்.