பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியே: நோபல் வென்ற பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் தாலர்

டெல்லி : மோடியின் உயர்மதிப்பு ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியே என்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற வல்லுநர் ரிச்சர்ட் தாலர் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடியால் அறிவிக்கப்பட்டு ஓர் ஆண்டு கடந்துவிட்டது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் சீர் குலைந்துவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. பா.ஜ.க இதை சிறப்பான பொருளாதார நடவடிக்கை என்றே இதுவரை சொல்லிவருகிறது.

தற்போது 2017ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற வல்லுநர் ரிச்சர்ட் தாலர் , பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது இந்திய மாணவர் ஒருவருக்கு அனுப்பிய இமெயிலில், கருப்புப் பணத்தை ஒழிக்க பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்துவது நல்லது தான்.

இருந்தாலும், அதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தது மிகவும் தவறான நடவடிக்கை. அதற்கு பதில் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது பொருளாதாரத்தை மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு செல்ல வழிவகுத்து இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பா.ஜ.க பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நியாயப்படுத்தும் விதமாக வெளியிட்ட செய்திகளில், பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் தாலரே இந்த நடவடிக்கையை பாராட்டி இருப்பதாக தெரிவித்தது. அதே சமயத்தில் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் உட்பட பல பொருளாதார வல்லுநர் இந்த நடவடிக்கை சரியானது அல்ல என்று தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: