பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மருத்துவம் செய்ய தடை விதிக்க கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் போலி மருத்துவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை வரவேற்கத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், களைகளை அகற்றும்போது பயிர்களும் பிடுங்கப்படுவதைப் போன்று, போலி மருத்துவர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளில் பாரம்பரிய சித்த மருத்துவர்களும் திட்டமிட்டு பழிவாங்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே சித்த மருத்துவர்களாக கருதப்படுவார்கள் என்றும், பட்டம் பெறாத பாரம்பரிய சித்த மருத்துவர்கள் அனைவரும் போலி மருத்துவர்கள் ஆவர் என்றும் விஜயபாஸ்கர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

விட்டால் அகத்தியரைக் கூட போலி மருத்துவர் என்று இவர் முத்திரை குத்துவார். பாரம்பரிய சித்த மருத்துவர்களின் அனுபவம்-சேவையைக் கருத்தில் கொண்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை போலி மருத்துவர்கள் என விமர்சிப்பது சித்த மருத்துவத்தை அவமதிக்கும் செயலாகும்.

சித்த மருத்துவம் தமிழ் மருத்துவம் எனும் நிலையில் அதை பாரம்பரியமாக, நேர்மையான முறையில் செய்து வருபவர்களுக்கு தொழில்பாதுகாப்பு வழங்க வேண்டும்.

சீனாவில் பாரம்பரிய மருத்துவர்கள் அங்கீகரிக்கப்பட்டு கிராமங்களில் மருத்துவம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளோருக்கு அடிப்படை ஆங்கில மருத்துவப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு அதையும் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோன்று தமிழகத்திலும் போதிய ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தி பாரம்பரிய சித்த மருத்துவர்கள் எந்த வித தடையுமின்றி, பாரம்பரிய மருத்துவம் செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

-dailythanthi.com

TAGS: