எண்ணெய் விலை உயர்வு : கனத்த மழையிலும் போராட்டம் தொடர்கிறது

நாடாளுமன்றத்திற்கு வெளியே, எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை எதிர்த்து, பக்காத்தான் ஹராப்பான் இளைஞர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது என்று அமானா கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் ஷாஸ்னி முனிர் முகமட் இத்னின் கூறினார்.

“தற்போது கனத்த மழை, ஆனால் கூடாரங்கள் கூட இல்லாமல், நாங்கள் இன்னும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

இன்று மதிய நேரத்தில், பொது இடத்தில் நிறுவப்பட்டிருந்ததால், பங்கேற்பாளர்களின் கூடாரத்தைக் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற அதிகாரிகள் அகற்றுவதாக  ஒரு வீடியோ பதிவில் காணப்பட்டது.

சில பங்கேற்பாளர்கள் கேள்வி எழுப்பியபோதும், நிலைமை சீராகவே இருந்தது. அவர்களோடு, பிகேஆர் எம்.பி.-கள் கூய் ஹ்சியாவ் லியோங் மற்றும் சிம் த்ஷி ஷிம் ஆகியோர் இருந்தனர்.

ஷாஸ்னி, “போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நாங்கள், போலிசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்,” என்றார்.

“எங்களுக்கு ஒன்றுதான் வேண்டும், எண்ணெய்கான RM1 பில்லியன் மானியம் வேண்டும், எண்ணெய் விலைகள் மீண்டும் குறைய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நேற்று நள்ளிரவில், 20 பேருடன் தொடங்கிய அப்போராட்டத்தில், தற்போது 8 பேர் உள்ளனர். நாளை (புதன்) மாலை 6 மணிக்கு அப்போராட்டம் நிறைவு பெறும்.