அரசியல்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் – நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காகவே குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதால், அவர்களின் விடுதலை குறித்து அரசியல் ரீதியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர்,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக கலந்துரையாட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் உள்ளடக்கிய கூட்டம் ஒன்றுக்கு நீதியமைச்சர் ஒழுங்கு செய்ய வேண்டும்.

இந்த விடயம் தொடர்பாக நான் பலமுறை சிறிலங்கா அதிபருடனும் பிரதமருடனும் பேசியுள்ளேன். அவர்களின் நிலைப்பாடுகளில் மிகவும் நியாயமாக இருக்கின்றன.

இப்போது புதிய நீதியமைச்சர் பதவியேற்றிருக்கிறார். அவர் மூலம் இந்தப் பிரச்சினையை நியாயமான முறையில் தீர்ப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்.

முன்னைய நீதி அமைச்சர் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை.

சட்டமா அதிபர், சட்டம் ஒழுங்கு அமைச்சின் அதிகாரிகள், ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டத்தைக் கூட்டி, இந்தப்பிரச்சினை குறித்து கலந்துரையாட வேண்டும் என்று நீதியமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் சில ஏற்பாடுகளைச் செய்வதற்கு முயற்சி செய்வோம்.

தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காகவே குற்றங்களில் ஈடுபட்டனரே தவிர தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல. 1971, 1987-89 காலகட்டங்களில் அரசியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க, அரசியல் ரீதியாக முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதுபோன்று ஏன் இப்போது முடிவுகளை எடுக்க முடியாது?

அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் அருவருப்பான சட்டம் என்று அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது.  சாதாரண சட்டத்தில் இருந்து பயங்கரவாத தடைச்சட்டம் வேறுபட்டது.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது, விசாரணைகள், ஒப்புதல் வாக்குமூலங்கள், ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுதல், சான்றுகளின் தன்மை ஆகியவை வேறுபட்டவை.

தன்னைப் படுகொலை செய்ய வந்தவருக்கு சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு அளித்துள்ளார். ஏனென்றால் குற்றவாளி அரசியல்நோக்கத்துடன் செயற்பட்டிருந்தார்.

அவருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட நிலையில்,  அவரை விட குறைந்த குற்றங்களைச் செய்தவர்களுக்கு ஏன் பொதுமன்னிப்பு அளிக்கக் கூடாது?

சரியான முடிவுகளை எடுப்பதைத் தடுப்பதற்கு, இத்தகைய பிரச்சினைகளை எழுப்பி  சமூக பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் நபர்களை நான் அறிவேன். ஆனாலும், அரசாங்கம் சரியானதை செய்வதிலிருந்து பின்வாங்கக் கூடாது.

விடுதலைப் புலிகள் மீண்டும் வருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை. கூட்டமைப்பு வன்முறைகளையும் விரும்பவில்லை. ஆனால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு முக்கியம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

-puthinappalakai.net

TAGS: