பினாங்கு வெள்ளத்திற்குக் காரணம் கரும வினையா? பிற்போக்குத்தனத்தின் உச்சம்

‘ஞாயிறு’ நக்கீரன், இந்த மாத தொடக்கத்தில் பினாங்கு மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பிரச்சினைக்குக் காரணம் ஒரு சிலரின் கரும வினைதான் காரணம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், மாண்புக்குரிய நாடாளுமன்றத்தில்; அப்படிப்பட்ட கருத்தைத் தெரிவித்திருப்பவர் ஆளும் தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்.

பெர்லிஸ், பாடாங் பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸாஹிடி பின் ஜைனுல் அபிடின், நீண்ட காலமாக அரசியலில் இருப்பவர். அம்னோ இளைஞர் பிரிவில் மூலம் படிப்படியாக கட்சியில் வளர்ந்து பதினெட்டு ஆண்டுகள் படிப்பினைக்குப் பின் பாடாங் பெசார் தொகுதித் தலைவராக உயர்ந்த அரசியல்வாதி ஸாஹிடி; 2008-ஆம் ஆண்டில் தொகுதித் தலைவரான அவர் கடந்த பொதுத் தேர்தலில் முதன் முதலில் அரசியல் களம் கண்டு, முதல் தேர்தலிலேயே மிகப் பெரும்பான்மையில் பாஸ் கட்சியை வீழ்த்தி நாடாளுமன்ற உறுப்பியத்தின்வழி அரசியல் புரிந்து வருகிறார். இப்படிப்பட்ட ஸாஹிடிதான், பினாங்கில் ஏற்பட்ட வெள்ளம் வடிவதற்குள் தன்னுடைய எண்ண வெள்ளத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

பினாங்கில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முதல் காரணம் இயற்கை. ஆனால், வடிகால் பராமரிப்பு முறையில் ஏற்பட்ட பின்னடைவு, மலைச்சாரல் பகுதிகளில் வகை தொகை இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற காரணங்களால் பேரளவில் வெள்ளம் ஏற்பட்டு அதன் விளைவாக ஏராளமான மக்கள் பெருந்தவிப்பிற்கும் இழப்பிற்கும் ஆளாயினர்.

வீடு-வாசல் பாதிப்பு, பொருள் இழப்பு, வாகன சேதம் என்றெல்லாம் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளானதுடன் இரவு வேளையில் தூங்குவதற்குக்கூட வகையின்றியும் சமைக்கவும் வழியின்றி பசித்த வயிறோடும் மக்கள் பட்ட அல்லல் சொல்லி மாளாது.

இவை யெல்லாவற்றையும்விட கொடுமையானது, பினாங்கு வெள்ளப் பேரிடரால் ஏற்பட்ட உயிர்ச்சேதமாகும்.  உண்மை நிலை யெல்லாம் இவ்வாறிருக்க, அரசியலில் சமய சிந்தனையைக் கலப்பது அப்பட்டமான மதவாதமாகும். அதுவும், பொது மக்கள் அனுபவிக்கும் இன்னலின் ஊடாக, தான் சார்ந்துள்ள கட்சி அல்லது அரசியல் அணியின் கருத்தை வெளிப்படுத்துவது பொருத்தமற்றது.

பரம்பொருள் என்பது, எல்லா உயிர்களுக்கும் பொதுவாகவும் அருளாட்சியுடனும் துலங்கும் பேராற்றல் ஆகும். அணுவாகவும் அண்டமாகவும் அண்டத்தின் பிண்டமாகவும் ஒப்புயர்வற்று அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைமையை அரசியல் களத்தில், அதுவும் உடல்-உயிர்-பொருட்சேதற்கு ஆளாகி மக்கள் படும் துயரை அரசியலுக்காக பயன்படுத்துவது அரசியல் முதிர்ச்சிக்கு அழகல்ல;

அதுவும் மக்கள் பிரதிநிதிகள் குழுமியுள்ள நாடாளுமன்றத்தில் குடிவழங்கல் மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசியபோது இப்படிப்பட்ட கருத்தை ஸாஹிடி தெரிவித்திருப்பது இனம்-மொழி-சமயம் கடந்து நடுநிலை சிந்தனையாளர்கள் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.

அவர்தான் அப்படி என்றால் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி, இன்னும் ஒருபடி மேலே சென்று, பினாங்கு மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் கடவுள் போட்ட கணக்கு என்று தன் மன அரிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பதினான்காவது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் பினாங்கு மாநிலத்தில் ஆளும் எதிர்க்கட்சி கூட்டணிக்கு நெருக்கடியையும் தேசிய முன்னணிக்கு சாதகத்தையும் ஏற்படுத்தும் விதமாக பினாங்கில் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டுள்ளது. எல்லாம் கடவுள் வகுத்தபடிதான் நடைபெற்றுள்ளது என்று கெராக்கான் கட்சியின் 46-ஆவது தேசியப் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டபோது துணைப் பிரதமருமான அவர் பேசியிருக்கிறார்.

நாட்டை வழிநடத்தும் முக்கியத் தலைவரான ஜாஹிட்டே(இவரே) இப்படி பேசி இருப்பதை நோக்கும்பொழுது ஸாகிடி(அவர்) அப்படி சொன்னதில் வியப்பில்லை; கோன் எவ்வழி குடிகள் அவ்வழி என்று நம் பாட்டி பெருமகளார் ஔவை மூதாட்டி முன்பே சொல்லி சென்றதை எண்ணிப் பார்க்கும் அதேவேளை, நம் அரசியல்வாதிகளும் தலைவர்களும் இன்னும் செப்பம் பெற வேண்டும் என்பதையும் சொல்லி வைப்போம்!!.