நாடாளுமன்றத்திற்கு வராதிருந்த உறுப்பினர்களை ஸாகிட் கடுமையாகக் கண்டித்தார்

 

 

நாடாளுமன்ற மக்களவையின் குழு அளவிலான 2018 ஆம் ஆண்டு பட்ஜெட் விவாதத்தின் போது பிஎன் உறுப்பினர்கள் அவைக்கு வராததால் அது கிட்டத்தட்ட ஏற்கொள்ளப்படாத நிலைக்குத் தள்ளப்படவிருந்தது. அவைக்கு வராதிருந்த பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களை துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹாடி கடுமையாகக் கண்டித்தார்.

மக்களவையின் அந்த அமர்வுக்கு வராதிருந்த பின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பிஎன்னின் தலைமைக் கொறடாவான அவர் கூறினார்.

“நான் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளேன். நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வது பற்றி அவர்கள் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும்”, என்று ஸாகிட் கூறினார்.

கடந்த திங்கள்கிழமை, உள்நாட்டு வாணிகம், கூட்டுறவுகள் மற்றும் பயனீட்டாளர் அமைச்சின் குழு அளவிலான பட்ஜெட் விவாதத்தின் போது ஜி. மணிவண்ணன் (பிகேஆர்-காப்பார்) வாக்கெடுப்பு நடத்தக் கோரியதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட வாக்களிப்பில் மொத்தம் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட்டிற்கு ஆதரவாகவும் 51 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இரு எம்பிக்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

80 க்கு மேற்பட்ட பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. “அதனால்தான், நான் அவர்களைக் கடுமையாகக் கண்டித்தேன்”, என்று ஸாகிட் கூறினார்.