இருமொழி திட்ட பெருநடைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை –  ஜோகூர் துன் அமினா பள்ளி போலீசில் புகார்!

வருகின்ற 25.11.2017-இல் நடைபெறவுள்ள 350 கிலோ மீட்டர் பெருநடை ஜோகூர் பாருவில் உள்ள துன் அமினா பள்ளியின் அருகாமையில் இருந்து தொடங்கவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர். இருமொழி திட்டத்தை அகற்ற கோரி இந்த ஆட்சேப பயணத்தை மே 19 இயக்கத்தின் தியாகு மேற்கொள்கிறார்.

இது சார்பாக துன் அமினா பள்ளிக்கும், அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் காவல் துறைக்கும் தகவல் பரிமாறப்பட்டது. காவல் துறை ஒப்புதல் வழங்க, துன் அமினா பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர், இராஜு என்பவர்  காவல் துறையில் புகார் ஒன்றை செய்துள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி தெரிவித்தார்.

அந்த புகாரில், தங்களது பள்ளி இந்த ஆட்சேப பெருநடையில்  சம்பந்தப்படவில்லை என்றும் அந்த நிகழ்வு சார்பாக தாங்கள் பொறுப்பேற்க இயலாது என்றும் கூறப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இது சிறுபிள்ளைத்தனமானது என்கிறார் இது  சார்பாக கருதுரைத்த மே 19 இயக்கதின் சிவா என்பவர்.

தமிழ்ப்பள்ளியின் நிலைத்தன்மையையும் தமிழ்க்கல்வியின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, இந்த இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு  உகந்தது அல்ல.  மாறாக, முதலில் ஆங்கிலத்தின் புலமையை ஆங்கில மொழியின் வழி கற்பதே சிறந்தது. ஆங்கில மொழியை  அறிவியல் கணிதம் வழி கற்பிக்க முயலுவது தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உகந்தது அல்ல என்பது மே 19 இயக்கத்தினரின் வாதமாகும்.

இதற்கு சான்றாக பல நிலைகளிலும் அனைத்துலக அளவிலும் நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளை முன்வைக்கும் இவர்கள், இந்த இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளின் கட்டமைப்பையும் பாதிக்கும் என்கிறார்கள்.

இந்தச் சூழலில்தான் தியாகுவின் இந்தப் பெருநடை.  தமிழ்ப்பள்ளியை காப்போம், தமிழ்பள்ளியை மீட்போம் என்கிறார், ஆழமான தமிழுணர்வை பெற்றுள்ள இந்த ஏழ்மையில் பிறந்த பட்டத்தாரி இளைஞர். விவேகானந்த தமிழ்ப்பள்ளியில் பயின்று  UPSR தேர்வில் ‘7 ஏ’ பெற்ற இவர் ஒரு மருந்தியல் பட்டத்தாரியாவர்.

“எமது போரட்டம் தமிழ்ப்பள்ளிகளை காப்பாற்ற, இதில் மாற்றுக் கருத்து இல்லை”, என்கிறார். துன் அமினா பள்ளியின் சார்பாக போடப்பட்ட  போலிஸ் புகார் பற்றி கேட்ட போது, “தமிழ்க்கல்விகாக, மொழிக்காக, தமிழர்களுக்காக, எதிர்காலத்தில் தமிழினம் வாழ வேண்டும் என்பதற்காக, வள்ளுவனுக்காக, இப்படி என்னால் எவ்வளவோ சொல்ல முடியும், இவற்றுக்கெல்லாம் உயிர் கொடுக்கும் ஓர் எளிய பங்களிப்புதான் என்னுடையது. அதற்கு ஆதரவு தாருங்கள்”, என்கிறார் தியாகு.