சி.என்.ஏ: பிஎன் சிலாங்கூரைக் கைப்பற்ற முடியாது ஆய்வாளர்கள் ஆரூடம்

சிலாங்கூரை மீண்டும் கைப்பற்ற பி.என். முயற்சி செய்தாலும், எதிர்க்கட்சி கூட்டணியிடமிருந்து அம்மாநிலத்தை எடுக்க முடியாது என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, சிலாங்கூர் மாநில மக்கள் கல்வி கற்ற சமூகமாக உள்ளனர், நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகளை நன்கு உணர்ந்துள்ளனர் என்று சில அரசியல் ஆய்வாளர் சேனல் நியூஸ்ஏசியா- விடம் கூறியுள்ளனர்.

உயர்ந்துவரும் வாழ்க்கை செலவினங்கள், நிலையற்ற ஊதியங்கள் ஆகியன சிலாங்கூரின் பெரும்பான்மை வாக்காளர்களைப் பாதிப்பதாக உள்ளது.

இருப்பினும், தற்போதைய மாநில அரசு சிறந்த முறையில் நிர்வாகம் செய்வதாக வாக்காளர்களில் பலர் நம்புகின்றனர்.

“நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரை இலக்காகக் கொண்டு, பிரதமர் வரவு-செலவுத் திட்டத்தை முன்வைத்திருந்தாலும், உயர்ந்துவரும் செலவினங்களும் மாறாத ஊதியமும் சிலாங்கூர் வாக்காளர்களுக்குப் பெரும் கவலையாகவே இன்னும் உள்ளது.

“சிலாங்கூரில் நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற மக்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக உள்ளனர். நாட்டின் பொருளாதாரக் குறியீடுகள் சாதகமான நிலையைக் காட்டினாலும்; அடிமட்டத்தின் உண்மை நிலை மிகவும் கடுமையாக உள்ளது,” என்கிறார் அஸ்ருல்.

அன்றாட செலவினங்கள், ஜிஎஸ்டி மற்றும் வாராந்திர எரிபொருள் விலைகள் கடுமையான பிரச்சினையாக இருப்பதாகக் கூறிய பிகேஆர் எம்.பி. ரபிஸி ரம்லியின் கூற்றைச் சேனல் நியூஸ்ஏசியா மேற்கோளிட்டுள்ளது.

“உயர்ந்துவரும் வாழ்க்கை செலவினங்களுக்கு ஏற்ப, சம்பள உயர்வு ஏற்படாதது தங்களுக்குச் சிரமத்தைக் கொடுப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்,” என்று ரபிஸி கூறினார்.

இதற்கிடையில், எதிர்க்கட்சி கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தை வெற்றிகரமாக நிர்வகித்து வருவதால், அம்மாநிலத்தைத் தக்கவைத்து கொள்ளும் என்று மெர்டேகா செண்டர் கருத்தாய்வு நிறுவனம் கூறியுள்ளது.

“எதிர்வரும் பொதுத் தேர்தலில், பல்முனை போட்டிகள் இருந்தாலும் அல்லது தேர்தல் எல்லைகளில் மாற்றம் ஏற்பட்டாலும், சிலாங்கூரைப் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தக்க வைத்துகொள்ளும்,” என மெர்டேகா செண்டரின் நிர்வாக இயக்குநரான இப்ராஹிம் சஃபியான் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பல்வேறு உள்விவகாரங்களால் பாதிக்கப்பட்டபோதிலும், பி.என். சிலாங்கூரைக் கைப்பற்றுவது கடினம்.

“பக்காத்தான் ஹராப்பான் முன்போல் வலுவாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் பி.என்.-உம் அப்படிதான் இருக்கிறது,” என்கிறார் பெர்சத்து தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவரான ஏ காடீர் ஜாசின்.

இதற்கிடையில், அம்னோ தலைமைத்துவம் பலவீனமாக இருப்பதால், சிலாங்கூர் நிச்சயம் ஹராப்பான் வசமே இருக்குமென டிஏபி மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது.

“அம்னோவிலிருக்கும் யாராலும், சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியின் திறமையோடு போட்டியிடமுடியாது,” என டிஏபியைச் சேர்ந்த லியு சின் தோங் கூறியுள்ளார்.

“சிலாங்கூரில் அம்னோ நீண்ட காலத்திற்கு முன்னமே இரண்டாகப் பிரிந்துவிட்டது … அவர்களால் 100% மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற முடியாது,” என்றார் அவர்.