இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கிலப் பாடப்புத்தகங்களின் விலையும் அதிகம், பயனற்றதும்கூட, என்கிறார் எம்பி

 

கல்வி அமைச்சு உள்நாட்டில் வெளியீடு செய்யப்பட்ட ஆங்கிலமொழி பாடப்புத்தங்களுக்கு மாற்றாக இரண்டு ஐரோப்பிய நாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி செய்ய திடீரென்று எடுத்த முடிவு கடும் கேள்விக்குரியதாகிறது என்று புக்கிட் பெண்டாரா நாடாளுமன்ற உறுப்பினர் ஸைரில் கிர் ஜொஹாரி கூறுகிறார்.

இந்தத் திடீர் முடிவு கிலியூட்டுவதோடு கவலையும் அளிக்கிறது, ஏனென்றால் அவற்றின் விலை மிக அதிகமாக இருப்பதோடு அவை அந்த நாடுகளின் பின்னணியைக் கொண்டிருக்கின்றன என்று அவர் கூறுகிறார்.

இறக்குமதி செய்யப்பட்ட சூப்பர் மைண்ட்ஸ் என்ற ஒரு புத்தகத்தின் விலை ரிம38.80; பிளஸ் 2 என்ற மற்றொரு புத்தகத்தின் விலை ரிம38.00

தற்போதைய தேவைக்கு ஏற்ப அவ்விரண்டு நூல்களையும் இறக்குமதி செய்ய ரிம33 மில்லியன் தேவைப்படும். ஆனால், தற்போது பயன்படுத்தப்படும் உள்நாட்டில் வெளியிடப்பட்ட ஒரு பாடப்புத்தகத்தின் விலை ரிம10 க்கும் குறைவாகும் என்று ஸைரில் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

அந்தப் பாடப்புத்தகங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படப் போவதில்லை. இங்கேயே அச்சடிக்கப்படும். அப்படியிருக்கையில், ஏன் இவ்வளவு அதிகமான விலை என்று அவர் வினவினார்.

இந்தப் புத்தகங்களின் அதிகப்படியான விலையை நியாயப்படுவதற்காக வேண்டுமென்றே அவற்றில் “இறக்குமதி செய்யப்பட்டது” என்று சீட்டு ஒட்டப்பட்டதா என்று மேலும் வினவினார்.