ஆங்கிலமொழியை ஏற்றுக்கொண்ட சிங்கப்பூர் ஒரு நாடல்ல, அம்னோ எம்பி உளறுகிறார்

 

பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலத்தை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை ரோம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அரிப்பின் நிராகரித்தார்.

இதற்கான காரணம், ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக ஏற்றுக்கொண்ட நாடுகள் வெற்றி பெறவில்லை என்று நாடாளுமன்றத்தில் 2018 ஆண்டுக்கான பட்ஜெட் விவாதத்தின் போது அவர் கூறினார்.

ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக ஏற்றுக்கொண்ட சிங்கப்பூரைத் தொடர்புப்படுத்தி பேசப்படுகிறது என்று கூறிய அவர், ஒரு நாட்டின் வெற்றிக்காண காரணம் மொழியல்ல; ஒரு நல்ல அமைவுமுறையை மேம்படுத்துதல் ஆகும் என்று நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் (பிஎசி) தலைவரான ஹசான் கூறினார்.

ஆசியாவில் ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் ஏதாவது அதன் மேம்பாட்டில் வெற்றி கண்டுள்ளது என்பதை எனக்குச் சொல்லுங்கள் என்றாரவர்.

“நீங்கள் சிங்கப்பூரைப் பற்றி பேசினால், அது ஒரு நாடல்ல, ஆனால் அது ஒரு மாநகர் அரசு” என்று ஹசான் அறிவித்தார்.

உலகில் வெற்றி பெற்ற நாடுகளான ஜப்பான், தைவான், சீனா மற்றும் கொரியா ஆகிய நாடுகள் ஆங்கில மொழியைப் பயன்படுத்தவில்லை, ஆனால், அவை வெற்றி பெற்ற நாடுகள் என்றாரவர்.

உலகிலுள்ள பெரும்பாலான வெற்றி பெற்ற நாடுகள் ஆங்கிலத்தைப் பயன்படுத்தவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஏன் ஆங்கிலத்தை மீண்டும் பயிற்று மொழியாக்க வேண்டும் என்பதில் இப்படி பேயாட்டம் போடுகிறோம் என்று ஹசான் வினவினார்.