முக்காடு அணிவது அரசியல் சாசனப்படியா – ஓர் அலசல்!

‘- ஞாயிறு’ நக்கீரன், நவம்பர் 24, 2017.   முஸ்லிம் பெண்கள் முக்காடு அணிவதற்கு மலேசிய அரசியல் சாசனத்திலேயே வகை செய்யப்பட்டுள்ளது என்று சுற்றுலா பண்பாட்டுத் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஸிஸ் கூறிருப்பது, அவர் எப்படிப்பட்ட சிந்தைனையாளர் என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.

சீக்கிய ஆண்கள் தலைப்பாகை அணிந்து கொள்வதைப் போல சீக்கிய பெண்களும் தாங்கள் அணியும் மேலாடையான துப்பட்டாவினால் முக்காடிட்டுக் கொள்வது அவர்களின் சமய வழக்கு; இது, உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அம்சமாகும்.

இதைப்போல இஸ்லாமிய ஆண்கள் குல்லா அணிவதும் முஸ்லிம் பெண்கள் தலையுடன் முகத்தில் ஒரு பகுதியையும் மூடிக் கொள்ளும் விதமாக பர்தா அணிவதும் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் சமயக் கூறாகும்.

இன்றைய நாகரிகப் பெண்கள் பர்தா அணிவதற்குப் பதிலாக முக்காடிட்டுக் கொள்கின்றனர். அக்கால இஸ்லாமியப் பெண்கள் பெரும்பாலும் வீட்டோடு இருப்பதால் பர்தா அணிந்து கொள்வதில் அவர்களுக்கு சிரமம் ஏதுமில்லை. அதேவேளை இஸ்லாமிய பெண்கள் 24 மணி நேரமும் பர்தா அணிவதில்லை.

வீட்டுப் பணிகளை மேற்கொள்ளும் பொழுதும் மற்ற வேளையிலும் கைலி, மேலாடையுடன்தான் இருப்பார்கள். கழுத்தைச் சுற்றி தோள்பட்டையில் இன்னொரு மெல்லிய மேலாடை இருக்கும். வீட்டு வாசலைத் தாண்டி முற்றத்திற்கு வரும்போதோ அல்லது வீட்டு வாசலில் வேற்று மனிதரை எதிர்கொண்டாலோ உடனே கழுத்தைச் சுற்றி இருக்கும் மெல்லிய துணியால் முக்காடு போட்டுக் கொள்வார்கள்.

இதைத்தவிர, வெளியூர் பயணத்திற்காகவோ இன்னும் நிக்காஹ்(திருமணம்)-வபாத்து(இறப்பு) போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவோ வீட்டைவிட்டு புறப்படும்போது கண்டிப்பாக பர்தா அணிவது முஸ்லிம் பெண்களுக்கு வழக்கமாகும்.

சமூக-பொருளாதார-கல்விச் சூழல் மாறிவிட்ட இந்தக் காலத்தில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முஸ்லிம் பெண்களும் அலுவலங்களில் படிக்கும் இஸ்லாமிய பெண்களும் பர்தா அணிவதில்லை. நாகரிக உடையை அணிந்து கொண்டு தலைக்கு முக்காடிடுவதற்காக தனியாக ஒரு துணியைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், மலாய்ப் பெண்களைப் பொருத்தமட்டில் எளிய உடையாக இருந்தாலும் ஆடம்பரமான உடையாக இருந்தாலும் பர்தா அணியும் வழக்கம் இருந்ததில்லை. அதேவேளை, வீட்டிற்கு பெரிய மனிதர்கள் வந்தால் அல்லது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்பொழுதோ அந்த நேரத்திற்கு முக்காடு இட்டுக் கொள்வது வழக்கம்.

இன்றைய   நாட்களைப் போல சிறுமியரும் மூதாட்டியரும் எந்த நேரமும் ‘தூடோங்’ என்னும் முக்காடு அணியும் வழக்கம், அன்றைய நாட்களில் இல்லை. இதற்கு தக்க சான்று 1960, 70, 80-களில் வெளி வந்த மலாய்த் திரைப்படங்களைப் பார்த்தாலே உண்மை நிலை நமக்கு தெரியவரும். தவிர, அந்தக் காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்களும் இந்த உண்மையை நமக்கு சுட்டும். இவ்வளவு ஏன், ‘மலாய்த் திரையுலக எம்ஜிஆர்’ என்று போற்றப்பட்ட பி. ரம்லியின் துணைவியாரும் பாடகியுமான திருவாட்டி சலோமா கூட முக்காடு அணியாமல்தான் பல மலாய்த் திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இவர் மட்டுமா? மலாய்க் கலையுலகைச் சேர்ந்த இன்னொரு தாரகை சரிஃபா ஐனியும் முக்காடு அணியாமல்தான் மேடையிலும் ஒளிப்பதிவு கேமராவிற்கு முன்னும் காட்சி அளிப்பார். மலாய்த் திரைப்பட உலகின் சகலகலாவல்லவரான ரம்லியின் பிரம்மாண்ட காவியமான ‘கிரீமி’ என்ற திரைப்படத்தில் இந்திய, சீன நாயகியருடன் மலாய்த் தாரகையும் கதாநாயகியராக நடித்துள்ளனர். அந்தப் படத்தில் மலாய் நடிகையரில் ஒருவர்கூட முக்காடு அணிந்து நடிக்கவில்லை.

ஆனாலும், காலம் மாறிவிட்ட இன்றைய சூழலில் மலாய்ப் பெண்கள் தவிர இஸ்லாமியப் பெண்கள் அனைவரும் வயது வேறுபாடின்றி எந்த நேரமும் முக்காடு அணிந்து கொள்கின்றனர். இது, அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்காகவும் ஆகிவிட்டது. ஓர் இஸ்லாமியக் குடும்பத்தில் பெண் மகவு பிறந்தால், இரண்டு முன்று வயதிலேயே முக்காடு அணிவது, இஸ்லாமிய உடைப் பண்பாடாகவே ஆகிவிட்ட நிலையில், நாட்டில் எங்கோ ஒரு மூலையில் ஒரு தங்கும் விடுதியில் முகப்பிட சேவையில் அமர்ந்த ஓர் இஸ்லாமியப் பணியாளர் முக்காடு அணிவதில் ஏற்பட்ட சிறு தடங்கல், இன்று தேசிய அளவில் பிரதிபலிக்கிறது.

இதுபோன்ற சமயங்களில் குரல் கொடுப்பதற்காக பெர்க்காசா என்னும் அமைப்பின் இப்ராகிம் அலி போன்றோரை அரசு சாரா அமைப்புகள் என்ற போர்வையில் அம்னோவே பயன்படுத்திக் கொள்வதுண்டு. அம்னோவிலும்கூட நேரடியாக நோ ஓமார் போன்றவர்கள் இப்படி உரக்கக் குரல் எழுப்பினர். தற்பொழுது, அவர் சற்றே தணிந்துள்ள நிலையில் தகவல், பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் போன்றவர்கள் இந்த வேலையைத் தொடர்கின்றனர். ஆனாலும், பண்பட்ட அமைச்சரான சுற்றுலா பண்பாட்டு அமைச்சர் முக்காடு அணிவதற்கு அரசியல் சாசனத்திலேயே சரத்து வரையப்பட்டுள்ளது என்றெல்லாம் முழங்குவது சரியல்ல.

முஸ்லிம் பெண்கள் முக்காடு அணிவதில் கடுகளவுகூட தடங்கலோ, சங்கடமோ, தடையோ, முட்டுக்கட்டையோ, இடரோ, சலசலப்போ எழாத நிலை உள்ளதா என்பது தெரியாது. அப்படி இருந்தால் அது அந்நியப்படுத்துவதாக கருதப்படவேண்டும். அதைவிட்டு எங்கோ ஒரு தங்கும் விடுதியில் முகப்பிட சேவையில் நிகழ்ந்த சிறு சலனத்திற்காக, அரசியல் சட்டத்தைக் காட்டி மிரட்டுவது ஒரு மூத்த அமைச்சரான இவருக்கு அழகல்ல!