இன்று எரி நெய்(பெட்ரோல்) விலை குறையக்கூடும்?

‘ஞாயிறு’ நக்கீரன், இனி வாகனங்களைப் பயன்படுத்து வாய்ப்பு பொது மக்களுக்கு அற்று விடுமோ என்று ஐயுறும் அளவிற்கு பன்னாட்டுச் சந்தையில் எரிணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 140 டாலர் வரை உயர்ந்தது. அப்போதுகூட மலேசியாவில் இந்த அளவுக்கு பெட்ரோல் விலை உயர்ந்தது இல்லை.

இப்போது வெறும் அறுபது டாலர் என்ற அளவில்தான் உலக சந்தையில் பெட்ரோல் விலைபோகிறது. ஆனால், மலேசியாவில் அத்யாவசிய பண்டங்கள் தொடர்ந்து விலை ஏறுவதைப் போல இந்த பெட்ரோலும் விலை ஏற்றப்படுகிறது.

இதற்கு ஆளும் தரப்பில் சொல்லப்படும் விளக்கம் ஆசியான் நாடுகளைவிட மலேசியாவில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது என்பதுதான். இது, அப்பட்டமான ஏமாற்றுக் கருத்தாகும். அது உண்மையானால், ஆசியானில் இடம்பெற்றுள்ள பத்து நாடுகளிலும் என்னென்ன விலையில் பெட்ரோல் விற்கப்படுகிறது என்ற பட்டியலையும் சேர்த்து சொல்வதுதான் முறை. அதை விடுத்து, உள்நாட்டு வாணிபம்-கூட்டுறவு-பயனிட்டாளர் நலத்துறை சார்பாக அமைச்சர்களும் அதிகாரிகளும் இப்படி ஆசியான் நாடுகளில் மலேசியாவில்தான் பெட்ரோல் விலை குறைவு என்று சொல்லியே மக்களை சமாளித்து வருகின்றனர்.

பொதுமக்களில் ஒரு தரப்பாரும் இது உண்மைதான் போலும் என்றெண்ணி சமாதானம் கொள்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த 15-11-2017 புதன்கிழமை அதிரடியாக ஆறு காசுகள் விலையேற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு, பயனீட்டாளர்களின் மனதில் பெட்ரோலைவிட வேகமாக எரியத் தொடங்கியதும், தேசிய முன்னணி மத்தியக் கூட்டரசின் சார்பில் சமாதான அறிக்கைகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன.

பெட்ரோல் விலை தொடர்ந்து விலையேற்றம் கண்டால், பொது மக்களுக்கான பிரிம் உதவித் தொகையை உயர்த்துவதைப் பற்றி அரசு பரிசீலனை செய்யும் என்று நிதி அமைச்சகத்தின் சார்பிலும் தேசியப் பொருளகத்தின் சார்பிலும் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இது, அழுகின்ற பிள்ளையின் கையில் விளையாட்டுப் பொருளையோ அல்லது திண்பண்டத்தையோ கொடுத்து சமாதானப்படுத்தும் அல்லது ஏமாற்றும் வேலை ஆகும்.

கடந்த 13-07-2017 முதல் வாரந்தோறும் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டு வருகிறது. இடையில், 21.09.2017-இல் 2 சென்னும்(ரோன் 95) 28.09.2017- இல் 3 சென்னும்(ரோன் 95) 12.10.2017-இல் 3 சென்னும்(ரோன் 95) என 8 காசுகளை மட்டும் குறைத்துவிட்டு கடந்த புதன்கிழமை வரை ஐம்பது காசுகளுக்கும் மேலாக உயர்த்திவிட்டது அரசு.

இப்படி, விரலைக் காட்டி உரலை இழுக்கும் வேலையைச் செய்வதே இந்த நிதி அமைச்சகமும் தேசியப் பொருளகமும்தான். மொத்தத்தில், இந்த இரு தரப்பாரும் பெட்ரோல் விலையை ஏற்றிவிட்டு, வேறு எவரோ அல்லது எந்தத் தரப்போ எரி நெய் விலையை ஏற்றுவதைப் போலவும் இவர்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாததைப் போலவும் ‘எரி நெய் தொடர்ந்து விலை ஏற்றம் கண்டால் பிரிம் தொகையைக் கூட்டிக் கொடுப்பதைப் பற்றி அரசு பரிசீலிக்கும்’ என்று பம்மாத்து புரிவது அப்பட்டமான குதர்க்க வேலை.

எது எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினை தேசிய அளவில் அதிகமாக பிரதிபலிப்பதால், எரிகின்ற பொதுமக்களின் மனதைக் குளிர்விக்க இந்த வாரம், அதாவது இன்று மாலை பெரோல் விலை குறைக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வெளிவரலாம்.

எனவே, நாளை முதல் ஒரு வாரத்திற்கு பெட்ரோல் விலை  இரண்டு சென்னோ அல்லது மூன்று சென்னோ(ரோன் 95) குறைவாக விற்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போமே என்ன நிலைமையென்று இன்று மாலையில்..!