நைஜீரியா: அருங்காட்சியகம் ஆகும் தீவிரவாத தலைவரின் வீடு

நைஜீரியாவில் உள்ள இஸ்லாமியவாத தீவிரவாதக் குழுவான போகோ ஹாராம்-இன் நிறுவனரின் வீடு அருங்காட்சியமாக மாற்றப்படவுள்ளது. இது அந்தப் பகுதியில் சுற்றலாவை மேம்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அந்தக் குழுவின் தளமாக விளங்கிய சம்பிஸ்டா வனப் பகுதியையும் போர்னோ மாநில அரசு சுற்றலாத் தலமாக மாற்ற பரிசீலித்து வருகிறது.

ஆனால், அக்குழுவின் நிறுவனர் முகமத் யூசுஃப்-இன் பெயரை இது நிலைபெறச் செய்யும் என்று இம்முடிவை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.

போகோ ஹாரம் குழுவின் எட்டு ஆண்டுகால ஊடுருவலில் சுமார் 20,000 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களில் இன்னும் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்படுகின்றனர்.

“அவர்கள் நாசமாக்கிய காவல் துறை கல்லூரி போன்ற இடங்களையே அருங்காட்சியகமாகக் முயல வேண்டும்,” என்றும் மனித உரிமைகள் வழக்கறிஞர் ஆண்டனி அகோலஹோன் பிபிசி பிட்ஜின் மொழி சேவையிடம் தெரிவித்தார்.

“மக்களைக் கொன்றவரின் வீட்டை அரசு அருங்காட்சியகம் ஆக்கக் கூடாது,” என்று அவர் கூறினார்.

மேற்கத்திய கல்வி முறையை எதிர்த்து 2002-இல் முகமத் யூசுஃப் அந்தக் குழுவைத் தொடங்கினார். இஸ்லாமிய அரசை அந்நாட்டில் நிறுவும் நோக்கில் அடுத்த ஏழு ஆண்டுகள் கழித்து அந்த அமைப்பு 2009-இல் தாக்குதலைத் தொடங்கியுது. அதே ஆண்டு, காவல் துறையின் வசம் இருந்தபோது யூசுஃப் கொல்லப்பட்டார்.

அப்போது முதல் ‘ஜமாத்து ஆலிஸ் சுன்னா லித்தாவதி வல்-ஜிஹாத்’ (நபிகளின் போதனைகளையும் ஜிஹாத்தையும் பரப்ப உறுதி பூண்டுள்ளவர்கள் ) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் அந்த அமைப்பு அண்டை நாடுகளிலும் பரவியது.

ஆனால், அந்த அமைப்பை வென்று வருவதாக நைஜீரிய அரசு கூறியுள்ளது. அதிகம் பாதிப்புக்கு உள்ளான போர்னோ மாகாணமும் எதிர்காலத் திட்டங்களைத் தீட்டி வருகிறது.

போர்னோ மாகாணத்தின் உள் விவகாரம், தகவல் மற்றும் கலாசாரத்திற்கான ஆணையர் முகமத் புலாமா, மைடுகுறியில் உள்ள வீடு அருங்காட்சியகம் ஆக்கப்படும் என்றும், “தீவிரவாத ஊடுருவல் தொடர்பான அனைத்தும் ஆவணப்படுத்தப்படும்,” என்றும் தெரிவித்துள்ளார்.

போகோ ஹாரம் அமைப்பினரால் 2014-இல் சிபோக் மாணவிகள் கடத்தி வைக்கப்பட்டிருந்த சம்பிஸ்டா வனப்பகுதியும் புனரமைக்கப்டும் என்று அவர் கூறினார். -BBC_Tamil